சீக்ரெட் ஆபரேஷன்.. அத்வானியையே கைது செய்தவர்.. ஆர்கே சிங்கிற்கு அமைச்சராக "புரோமோஷன்".. மோடி அதிரடி!
டெல்லி: மத்திய இணை அமைச்சராக பதவி வகித்த ஆர்கே சிங் (ராஜ்குமார் ரஞ்சன் சிங்) தற்போது மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார். புதிய அமைச்சரவை மாற்றத்தை முன்னிட்டு இவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
1990 அக்டோபர்.. குஜராத்தில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக அத்வானி ரதயாத்திரை நடத்திய காலம். பாஜகவின் அரசியல் அஸ்திவாரம் வலுவாக ஊன்றப்பட்டது இந்த யாத்திரையில்தான். இந்த யாத்திரையை வெளிப்படையாக எதிர்த்து நின்றவர்களில் முதன்மையானவர் அப்போதைய பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்.
அத்வானி ஜி.. எங்கள் மாநிலத்திற்கும் உங்கள் கால் பட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது என்று பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக லாலு பிரசாத் சவால் விட்டு இருந்தார். அப்போது லாலு மிகப்பெரிதாக நம்பிய அதிகாரிதான் ஆர்கே சிங்.

பீகார்
ஐபிஎஸ் அதிகாரியான இவர் பீகாரில் கூட்டுறவுத்துறையில் அப்போது முக்கிய பொறுப்பில் இருந்தார். லாலுவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்கே சிங்கிற்கு அத்வானியை கைது செய்யும் பொறுப்பு 1990ல் வழங்கப்பட்டது. சமஸ்திபூர் என்ற பீகார் பகுதியில் அத்வானி ரதயாத்திரை சென்று கூட்டம் நடத்துவதாக இருந்தது. இந்த கூட்டத்தில் அத்வானிக்கு பாதுகாப்பாக பல நூறு பாஜகவினர், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

கைது
இந்த கூட்டத்திற்கு வரும் அத்வானியை கைது செய்யும் டாஸ்க் ஆர்கே சிங்கிடம் தரப்பட்டது. அத்வானியை அவ்வளவு எளிதாக கைது செய்து விட முடியாது. அத்வானிக்கு இந்த விஷயம் லேசாக கசிந்தால் கூட கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற நிலை நிலவியது. யாருக்கும் கசியாமல், திடீரென அத்வானியை கைது செய்தால் மட்டுமே கலவரத்தை தடுக்க முடியும். இதற்காக களமிறக்கப்பட்டவர்தான் ஆர்கே சிங். அப்போது இவருக்கு ஸ்பெஷல் அதிகாரம் கொடுத்து, முதல்வர் லாலு பிரசாத் சமஸ்திபூரில் களமிறக்கினார். ஆர்கே சிங் அங்கு அத்வானியை கைது செய்யும் ஆபரேஷன் மிக சீக்ரெட்டாக நடந்தது.

தெரியாது
அத்வானி கைது செய்யப்படுவார் என்ற விஷயம் அமைச்சர்கள், சமஸ்திபூர் எஸ்பி என்று யாருக்கும் தெரியாது. மிக அமைதியாக காய் நகர்த்திய ஆர்கே சிங், 1990 அக்டோபர் 30ம் தேதி அத்வானியை கைது செய்தார். யாருமே எதிர்பார்க்காத மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைந்தது. அப்போது பெரிய அளவில் கவனம் ஈர்த்த ஆர்கே சிங், அரசியல் ரீதியாக அதன்பின் லாலுவுடன் இணக்கம் அடைவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

நெருக்கம்
ஆனால் அதன்பின் வந்த நிதிஷ் குமார் அரசிலும் அரசுக்கு நெருக்கமாக இருந்தார். பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சர் அத்வானி தன்னை கைது செய்த ஆர்கே சிங்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கினார். உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளராக ஆர்கே சிங்கை அத்வானி நியமனம் செய்தார்.

கைது செய்தவர்
தன்னை கைது செய்தவர் என்றும் பார்க்காமல், திறமையான அதிகாரி என்பதால் அந்த பொறுப்பை ஆர்கே சிங்கிற்கு அத்வானி கொடுத்தார். அத்வானி குட்புக்கிலும், பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவராகவும் ஆர்கே சிங் மாறினார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பல பொறுப்புகளை இவர் வகித்தார்.

அமைச்சர்
அதன்பின் 2013ல் ஓய்வு பெற்ற பின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனநாயக கட்சியில் இணையவும், அங்கு உயர் பொறுப்புகளை வகிக்கவும் இவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஆர்கே சிங் 2013ல் பாஜகவில் இணைந்தார். பீகாரில் உள்ள ஆர்ரா தொகுதியில் 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2019ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் குட் புக்கில் இருந்தவர் ஆர்கே சிங்.

பிரதமர் மோடி
2017ல் இவர் மின்சார துறையின் இணை அமைச்சர் (தனி அதிகாரம்) பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பின்னர் 2019ல் இவருக்கு கூடுதலாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இணை அமைச்சராக இருந்த ஆர் கே சிங் மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்று மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட இவரின் பொறுப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications