அடுத்த சிக்கலில் கெஜ்ரிவால்! அரசு பங்களா புனரமைப்புக்கு ரூ.53 கோடி செலவு! விசாரிக்கப்போகும் சிஏஜி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார். தனது பங்களாவை புனரமைக்க ரூ.53 கோடி செலவிட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சிஏஜி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் விரைவில் சிஏஜி விசாரணை நடைபெற உள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சிக்கலில் மாட்டியுள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக உள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநராக விகே சக்சேனா உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆளுநர் விகே சக்சேனாவுக்கும் இடையே சுமூக உறவு என்பது இல்லை. இருவருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே பொருத்தம் என்பது அறவே இல்லை.
குறிப்பாக டெல்லியில் குடிமை பணி அதிகாரிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் மத்திய அரசு சட்டம் திருத்த மசோதா ஒன்று கொண்டு வந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்க பிற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இதற்கிடையே தான் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளார். அதாவது டெல்லியில் அவர் குடியிருக்கும் பங்களா சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. இதற்கு மொத்தம் ரூ.53 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புனரமைப்பு பணியில் முறைகேடுகள் நடந்ததாக ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்றன. இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே தான் முறைகேடு புகார் குறித்து சிஏஜி எனும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநர் விகே சக்சேனா மே மாதம் 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவலுக்கு நடுவே பெருந்தொகையில் பங்களா புனரமைக்கப்பட்டுள்ளதோடு விதிமீறல்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை பரிசீலனை செய்த மத்திய உள்துறை அமைச்சர்கள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் சிறப்பு விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கெஜ்ரிவால் தனது பங்களாவை புனரமைக்க ரூ.53 கோடி செலவிட்ட நிலையில் முறைகேடு தொடர்பாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் விசாரணையை தொடங்க உள்ளனர். இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications