இன்னும் 6 மாதங்களில்..அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு vs கள நிலவரம் என்ன
டெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது சாத்தியம் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலையின் தாக்கம் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.27 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் மற்றொரு ஏற்படாமல் இருக்கத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய அரசு தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த அனுமதி அளித்துள்ளது.

தடுப்பூசி பணிகள்
இருப்பினும், தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக 18+ அனைவருக்கும் தடுப்பூசி பணிகள் பல மாநிலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி பணிகளையும் கொஞ்சக் காலம் நிறுத்தியும் வைத்தன. இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

சாத்தியம் தானா
கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்த அறிவிப்பு சாத்தியம் தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தற்போது தடுப்பூசி செலுத்தும் வேகத்தில், நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்தவே எட்டு மாதங்கள் வரை ஆகலாம். இந்தியாவிலுள்ள 94.4 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் நேற்று வரை இந்தியாவில் 16.7 கோடி பேருக்கு மட்டும் தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள் வேகம்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே தடுப்பூசி பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்தன. ஏப்ரல் மாதம் முதலே தினசரி 20 லட்சத்திற்கும் குறைவான நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டன. சுமார் 45 நாட்கள் பிறகு கடந்த வாரம் தான் தடுப்பூசி பணிகள் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கின. கடந்த வாரம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே வேகத்தில் தடுப்பூசி பணிகள் நடைபெற்றால், நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கவே 256 நாட்கள், அதாவது எட்டு மாதங்கள் ஆகும்.

வேகப்படுத்த வேண்டும்
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை இந்தியா வேகப்படுத்த வேண்டும் என்றும் இது மக்களின் உடல்நிலையை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தையும் காக்கும் எனத் தலைமை பொருளாதார ஆலோசகர் கே வி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாட்டில் தடுப்பூசி உற்பத்தி அதிகரித்திருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகமாக மேற்கொண்டால் தான் மூன்றாம் அலையிலிருந்து நம்மால் தப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி உற்பத்தி
கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமை பொருளாதார ஆலோசகர் கே வி சுப்பிரமணியன் கூறினார். முன்னதாக இது குறித்து சுகாதார துறை கூறுகையில், நாட்டில் தடுப்பூசி உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மே மாதம் 7.94 கோடியாக இருந்த தடுப்பூசி உற்பத்தி, ஜூன் மாதம் 12 கோடியாக உயரும். ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் வைரஸ் பரவல், தடுப்பூசி பணிகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications