கனடாவில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங்! இந்தியாவில் நடத்திய கொடூர தாக்குதல்கள்! அதிர வைக்கும் தகவல்கள்
டெல்லி: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பகீர் தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா குற்றஞ்சாட்டியதே இதற்குக் காரணம்.

இதற்குக் கனடா எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை என்ற போதிலும், தொடர்ந்து இந்தியாவைக் குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து மோசமாகி வருகிறது.
யார் இவர்: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் ஆவர். அவர் 1980களில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் சிறுவயதிலிருந்தே உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
அங்கு டிரக் ஒட்டுநராக பணிபுரிந்த இவர், பாகிஸ்தானுக்கு வந்து வெடிபொருட்கள் மற்றும் பயிற்சிகளையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகக் கனடா மண்ணில் தஞ்சம் புகுந்த அவர், அங்கிருந்தபடியே பஞ்சாபில் பல கொலைகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பயங்கரவாத அமைப்புகள்: இந்தியாவில் 1980கள் மற்றும் 90களில், அவர் காலிஸ்தான் கமாண்டோ படை பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன் பின்னர் 2012க்கு பிறகு காலிஸ்தான் டைகர் போர்ஸ் அமைப்புடனும் தொடர்பில் இருந்துள்ளார். இந்தியாவில் பல பயங்கரவாத வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் தான் 1996 இல் அவர் கனடாவுக்குத் தப்பிச் சென்றார்.
அங்கிருந்த போது தான் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவர் ஜக்தர் சிங் தாராவுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 2012 இல் பாகிஸ்தான் சென்று சுமார் 15 நாட்கள் தங்கிய அவர் ஆயுதங்கள் மற்றும் வெடி பயிற்சியைப் பெற்றதும் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்தவுடன் இந்தியாவில் தாக்குதல்களை நடத்த நிதி திரட்டி வந்துள்ளார். இதற்காகவே பஞ்சாபில் தனியாக ஒரு கேங்கையும் அவர் உருவாக்கியுள்ளார்.

இந்தியாவில் பல தாக்குதல்கள்: கடந்த 2014 ஆம் ஆண்டில், ஹரியானாவின் சிர்சாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த நிஜ்ஜார் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரால் கடைசி நேரத்தில் அவரது குழுவால் இந்தத் தாக்குதலை நடத்த முடியவில்லை. இதையடுத்து பஞ்சாபைச் சேர்ந்த சிவசேனா தலைவர் நிஷாந்த் சர்மா என்பவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
மேலும், 2020இல் தந்தை-மகனான இரட்டையர்களான மனோகர் லால் அரோரா மற்றும் ஜதிந்தர்பீர் சிங் அரோரா ஆகியோரின் கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் தந்தை மனோகர் லால் கொல்லப்பட்ட நிலையில், மகன் தப்பிவிட்டார். பஞ்சாபில் நடந்த இந்த கொலையைக் கனடாவில் இருந்து ஹர்தீப் சிங் தான் ஸ்கெட்ச் போட்டுள்ளார். இதற்கும் பெருந்தொகையை அவர் கனடாவில் இருந்து அனுப்பியதும் தெரிய வருகிறது.
ஹர்தீப் சிங் கனடாவில் இருந்தபடியே பஞ்சாபில் ஒரு பயங்கரவாத டீமை உருவாக்கியுள்ளார். இதைக் கொண்டு பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும் ஹர்தீப் சிங் திட்டமிட்டுள்ளார். இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் மாதம் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications