காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் எப்போது? காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு
டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடத்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்டகாலம் சட்ட போராட்டங்கள் நடந்தன. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது.

குறிப்பாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட வேண்டிய 57 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முறையிட்டு வருகிறது. இந்த நிலையில்,கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம் நடந்தது. அப்போது தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கர்நாடகா அரசு திடீரென தண்ணீர் திறப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் 2 ஆவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கர்நாடகாவில் நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதனிடையே ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கானது வரும் 21 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் போது காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என நீதிபதிகள் கேட்பார் என்பதால் அதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாக கூடியது.
டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடத்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முக்கிய பரிந்துரைகளை ஒழுங்காற்று குழு அளிக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications