தொடையில் 14 கிலோ தங்கம் கடத்திய 'கடத்தல் ராணி' தமிழ் நடிகை ரன்யா ராவ் மீது சிபிஐ வழக்கு பாய்ந்தது!
டெல்லி: தங்கக் கடத்தல் ராணியாக வலம் வந்த தமிழ் திரைப்பட நடிகையான ரன்யா ராவ் மீது சிபிஐ-ம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் நெட் ஒர்க் தொடர்பாக சிபிஐ-ன் டெல்லி, மும்பை அதிகாரிகளும் அதிரடி விசாரணையை நடத்தி வருகின்றனர்.
வாகா தமிழ்த் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ரன்யா ராவ். துபாயில் இருந்து 14 கிலோ தங்க கட்டிகளை தொடையில் கட்டி வைத்து கடத்தி வந்த போது கர்நாடகா மாநிலம் பெங்களூர் விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் பிடிபட்டார் ரன்யா ராவ். இதனைத் தொடர்ந்து ரன்யா ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் 4 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. கர்நாடகா மாநில ஐபிஎஸ் அதிகாரியின் வளர்ப்பு மகள்தான் ரன்யா ராவ்.

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரன்யா ராவ், தற்போது போலீசாரின் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார். ரன்யா ராவ் கடந்த 15 மாதங்களில் துபாய்க்கு 48 முறை பயணம் மேற்கொண்டிருந்தார்; அமெரிக்காவும் சென்றிருந்தார்; துபாய்க்கு சென்று திரும்புவதே தங்க கட்டிகளை கடத்தி வருவதற்குதான் என்பது உறுதியானது; அமெரிக்காவுக்கும் ரன்யா ராவ் எதற்காக சென்றார் என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் ரன்யா ராவ் மீது தாமாக முன்வந்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் ரன்யா ராவின் தங்க கட்டிகள் நெட் ஒர்க் தொடர்பாக டெல்லி, மும்பையில் சிபிஐ அதிகாரிகள் குழு அதிரடி விசாரணையை நடத்தியும் வருகிறது. ரன்யா ராவின் நெட் ஒர்க்கில் இருக்கும் டெல்லி, மும்பை தங்க கடத்தல் கும்பல்கள் எவை என்பதுதான் சிபிஐ விசாரணையின் மையம் என்கின்றன அரசு தரப்பு வட்டாரங்கள்.
இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளும் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க இருக்கின்றனராம். இதனால் தங்கக் கடத்தலில் மகாராணியாக கொடி கட்டிப் பறந்த நடிகை ரன்யா ராவ் மீண்டு வரவே முடியாத வகையில் சட்டத்தின் பிடியில் வசமாக சிக்கிவிட்டார்.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே பெங்களூர் போலீசார் கஸ்டடி எடுத்திருப்பது போல சிபிஐ தரப்பிலும் ரன்யா ராவை கஸ்டடியில் எடுக்க சிபிஐ தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications