புதிய இந்தியாவின் புதிய அடையாளம்... 130 கோடி மக்களின் பெருமைக்குறிய தினம் - பிரதமர் மோடி
டெல்லி: இந்தியா 75 வது சுதந்திரத்தை கொண்டாடும் போது புதிய நாடாளுமன்றத்தை வைத்திருப்பதை விட அழகான, புனிதமான விஷயம் எது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பழைய நாடாளுமன்ற கட்டிடம் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு ஒரு புதிய திசையை அளித்தது என்றும் புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் தற்போதைய கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். கலைநயம், உயர்பாதுகாப்பு, பசுமை எரிசக்தி பயன்பாடு ஆகிய சிறப்பு அம்சங்களுடன், நான்கு தளங்கள், ஆறு வாயில்களுடன் அமைய உள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 64,500 சதுரஅடி பரப்பளவில் உருவாக்கப்படுகிறது. பிரதமர் அலுவலகம், அமைச்சர்களின் அலுவலகங்கள், ஆகியவற்றுடன் 120 முக்கிய துறைகளின் அலுவலகங்கள் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் அமைகின்றன. ஒவ்வொரு எம்.பிக்கும் 40 சதுரமீட்டர் பரப்பளவில் அலுவலக அறைகள், 1224 பேர் அமரும் கூட்ட அரங்கம் ஆகியவற்றுடன் அழகுற வடிவமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும். புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று டெல்லியில் நடைபெற்றது. சர்வமத பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் உட்பட.. சர்வ மத பிரார்த்தனையோடு நடந்த நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழா
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, லோக்சபாவில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும். இந்திய கலாச்சாரம், பிராந்திய கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றம் அலங்கரிக்கப்படும். எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதால் இன்று ஒரு வரலாற்று நாள். நாடாளுமன்றத்தின் இந்த புதிய கட்டிடத்தை இந்திய மக்கள் அனைவரும் இணைந்து கட்டுவோம் என்று கூறினார். இந்திய ஜனநாயக வரலாற்றில் இது முக்கியமான நாள் என்று கூறினார்.
புதிய இந்தியாவின் புதிய அடையாளம்தான் இந்த நாடாளுமன்ற கட்டிடம். பழைய நாடாளுமன்ற கட்டிடம் நூற்றாண்டு பழமையானது. பலமுறை புதுக்கப்பட்டு விட்டது. பழைய கட்டிடத்தை இடிக்காமல் தற்போது புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. பழமையும் புதுமையும் இணைந்ததாக நாடாளுமன்ற கட்டிடம் அமையும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஓய்வு தேவை என்றும் மோடி கூறினார்.
இந்தியா 75 வது சுதந்திரத்தை கொண்டாடும் போது புதிய நாடாளுமன்றத்தை வைத்திருப்பதை விட அழகான, புனிதமான விஷயம் எது என்று கூறிய மோடி, பழைய நாடாளுமன்ற கட்டிடம் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு ஒரு புதிய திசையை அளித்தது என்று கூறினார்.
சுய சார்பு இந்தியாவின் கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் சாட்சியாக இருக்கும். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஆத்மனிர்பர் பாரத் எனப்படும் சுய சார்பு இந்தியாவின் இலக்கை அடையவும், 21 ஆம் நூற்றாண்டின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும் உதவும் என்றும் மோடி கூறினார். வரலாற்றை உயிருடன் வைத்திருக்கும்போது, நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் மக்களுக்கு பொறுப்புடன் பதில் கூற வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் இருந்து தொகுதி எம்பிக்கள் தங்களின் தொகுதி மக்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறினார்.

உலகின் பிற பகுதிகளில், வாக்களிக்கும் சதவிகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது, எங்கள் விஷயத்தில் அது அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எம்.பி.யாக 2014 ல் முதன்முறையாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வர வாய்ப்பு கிடைத்த தருணத்தை என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. ஜனநாயகத்தின் இந்த கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு, நான் தலை குனிந்து இந்த ஜனநாயக கோவிலுக்கு வணக்கம் தெரிவித்தேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய மற்றும் பழையவற்றின் சகவாழ்வுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஒரு எடுத்துக்காட்டு. நேரம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தனக்குள்ளேயே மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சி இது என்றும் மோடி கூறினார். இந்த வரலாற்று தருணத்தை நாம் காணும்போது 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இது பெருமை சேர்க்கும் நாள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.