இலவசம் குறித்து விவாதம்.. மக்கள் மத்தியில் அச்சம்.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
டெல்லி: இலவசங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் ஏழை, எளிய மக்கள் மத்தியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றசாட்டியுள்ளார்.
இந்தியாவில் அரசியல் கட்சியினர் இடையே இலவசம் குறித்த விவகாதம் தொடங்கியுள்ளது. அண்மையில் உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வாக்குகளை பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் ஆபத்து நிறைந்தது. நாட்டின் அரசியலில் இருந்து அவை நீக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இலவச கலாச்சாரம் மிக ஆபத்தானது. இந்த கலாச்சாரத்துடன் இணைந்திருப்பவர்கள், புதிய விரைவுசாலைகளை, புதிய விமான நிலையங்களை அல்லது பாதுகாப்பு பகுதிகளை உங்களுக்காக கட்டமைக்கவே மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் வீழ்த்த வேண்டும் என பேசினார்.
இது பல்வேறு அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலவசத்திற்கும், சமூக நீதிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் மக்களுக்கு இலவசம் என்று விமர்சிப்பர் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் விமர்சித்தனர். இதுமட்டுமல்லாமல் இலவச அறிவிப்புகள் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் குஜராத் மாநில தேர்தலில், ஆம் ஆத்மி அரசு இலவச மின்சாரம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய வாக்குறுதிகளை வழங்கியது.
இதனால் மறைமுகமாக அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், இலவச கல்வி, மருத்துவம் வழங்குவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை எந்த ஒரு அரசும், மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் அளிப்பதை இலவச அறிவிப்பாக கூறியதில்லை. தற்போது இது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கூறியதன் மூலம், ஏழை, எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்.
இலவச அறிவிப்புகள் பிரச்னையில் விபரீதமான திருப்பத்தை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார். இந்தப் பிரச்னை தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications