டெல்லி நிலைமை சென்னைக்கு வரக்கூடாது.. 75 இடங்களில் களமிறக்கப்பட்ட சென்சார்கள்.. ஸ்டாலின் மெகா மூவ்
டெல்லி: டெல்லி போன்ற காற்று மாசுபாடு நிலை சென்னைக்கு ஏற்பட கூடாது என்று தமிழ்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. சென்னையில் இதற்கான புதிய சென்சார்கள் அமைக்கப்பட்டு அதற்கு ஏற்றபடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மாநகரின் காற்றுத் தரத்தை பொதுமக்களின் தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தும் புதிய திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நகரின் முக்கிய மாசு நிறைந்த 75 பகுதிகளில் சுற்றுச்சூழல் சென்சார்கள் நிறுவப்பட்டு, அவற்றிலிருந்து பெறும் நிகழ்நேரத் தரவுகள் LED திரைகளில் காட்சிப்படுத்தப்படும். இந்த சென்சார்கள் காற்றுத் தரம், வெப்பநிலை உட்பட மொத்தம் 18 அளவீடுகளைக் கண்காணிக்கும்.

சென்னை காற்று தரம் - சென்சார்கள்
தற்போது, சென்னையில் மொத்தமாக ஏழு காற்று தர குறியீடு (AQI) கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இதில், நான்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தாலும், மூன்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தாலும் இயக்கப்படுகின்றன. எனினும், இவற்றில் மூன்றே மூன்று மையங்களே ரியல் டைம் செயல்பாட்டில் உள்ளன; மற்றவை நிகழ்நேரத் தரவுகளை அளிப்பதில்லை. மாநிலத்தின் பிற நகரங்களிலும் நிலை இதே என்பதால், இப்புதிய முயற்சி அவசியமாகிறது.
இந்த 75 சென்சார்கள் , மணலி, எண்ணூர், கொடுங்கையூர், பெருங்குடி, கோயம்பேடு, டி.நகர், ஆலந்தூர், வேளச்சேரி, அண்ணாநகர் உள்ளிட்ட அதிக மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுவப்படும். தொழிற்சாலை, வாகனப் புகை, கழிவு எரிப்பால் உண்டாகும் வாயு மாசுகள், PM2.5, PM10 போன்ற துகள்கள், சுற்றுப்புற ஒலி, வெப்பநிலை, ஈரப்பதம், ஒளிச்செறிவு, புற ஊதா கதிர்வீச்சு, AQI உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இவை பதிவு செய்யும். இத்தரவுகள் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) மூலம் கண்காணிக்கப்படும்.
ICCC அமைப்பின் வட்டாரங்கள் இது தொடர்பாக கூறுகையில், "கடந்த மழைக்காலங்களில் மழைப்பொழிவு தரவை துல்லியமாக கணித்தோம். நகரில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால், காற்று தர கண்காணிப்பு மிக முக்கியம். எனவே, அதிக மாசுபாடு உள்ள பகுதிகளில் இந்த சென்சார்கள் நிறுவப்படும்," என்றார்.
சென்னை சென்சார்கள்
சேகரிக்கப்படும் தரவுகள் மூலம் அரசுக்கு மாசுக்கட்டுப்பாட்டிற்கு இலக்கு சார்ந்த தீர்வுகளை வடிவமைக்க ஆலோசனை வழங்கப்படும். இவை பொது விழிப்புணர்வை ஏற்படுத்த LED திரைகளில் காட்சிப்படுத்தப்படும்; ஆனால் மாநகராட்சியின் இணையதளம் வழியாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்காது. சென்னையின் கடலோர, வெப்பமண்டல சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இந்த சென்சார்கள் நிகழ்நேர, நேர முத்திரையிடப்பட்ட மற்றும் புவியிடக் குறியிடப்பட்ட தரவுகளை வழங்கும்.
சமீபத்திய தரவுகளின்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று கண்காணிக்கப்பட்ட இடங்களில் காற்றுத் தரம் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருந்தது. மணலி நியூ டவுனில் PM2.5 அளவு 76 ஆகவும், வேளச்சேரியில் 100 ஆகவும், பெருங்குடியில் 82 ஆகவும் பதிவாகியுள்ளது.
டெல்லியில் காற்று தரம் மிக மோசமாக உள்ளது. டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து தற்போது டெல்லி AQI 1000ஐ தாண்டி உள்ளது. அதிகாலை நேரங்களில் 1000 ஆகவும் , பகல் நேரங்களில் 561 ஆகவும் உள்ளது. டெல்லி போன்ற காற்று மாசுபாடு நிலை சென்னைக்கு ஏற்பட கூடாது என்று தமிழ்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications