தமிழ்நாட்டில் SIR பணிகள் தொடங்கும் தேதி அறிவிப்பா? தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை பிரஸ்மீட்
டெல்லி: டெல்லியில் நாளை மாலை 4.15 மணிக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது தமிழ்நாடு உள்பட விரைவில் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில், முதல் முறையாக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் (SIR) திருத்தப் பணி நடைபெற்று, அதன் மூலம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பீகாரில் நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்
குறிப்பாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த பணி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், "நாடு முழுவதும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரை போல சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளன. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கருத்தில் கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
நாளை மாலை 4.15 மணிக்கு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த பணி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காக தேதி எந்த நேரமும் வெளியிடப்படலாம். அதற்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம் என்று தேர்தல் அதிகாரிகளும் கூறியிருந்தனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் டெல்லியில் நாளை செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்க உள்ளனர். நாளை மாலை 4.15 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாளை அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவர்
நாளை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உட்பட சுமார் 10 மாநிலங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அஸ்ஸாம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவையும் இந்தப் பட்டியலில் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணிகளின் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு, புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவர்.
மூன்று நாட்களுக்கு முன்னர், தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் டெல்லியில் ஒரு சந்திப்பை நடத்தியது. அப்போது பீகாரில் நடைபெற்ற தேர்தல் அனுபவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்முறையை மேம்படுத்துவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications