சீனா சேட்டை.. லடாக் எல்லையில் மின் வினியோக மையங்களை முடக்க முயற்சி.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்
டெல்லி: சீனா மீண்டும் எல்லையில் வாலாட்ட துவங்கி உள்ளது. கடந்த 8 மாதங்களாக லடாக் அருகே இந்திய மின்வினியோக மையங்களை சீனா தனது ஹேக்கர்கள் மூலம் குறிவைத்து தகவல்கள் சேகரிக்க முயற்சித்ததாக அமெரிக்க தனியார் உளவு நிறுவனம் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது.
இந்தியாவில், சீனா அடிக்கடி வாலாட்டி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தாலும் சீனா தனது நடவடிக்கையை மாற்றி கொள்வது இல்லை.
இதனால் இருநாடுகளின் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது பதற்றமும் நிலவி வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவங்களும் எல்லையில் எப்போதும் உஷராகவே உள்ளன.
2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.

சீனாவின் சதிச்செயல்
இந்நிலையில் தான் மீண்டும் சீனா சதிகார செயலில் இறங்கியுள்ளது. இந்தியாவின் எல்லையில் உள்ள மின்பகிர்மான மையங்களை குறிவைத்து ஹேக்கர்கள் உதவியுடன் ஹேக்கிங் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் தனியார் உளவுத்துறை நிறுவனமான Recorded Future இதுபற்றி திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தி உள்ளது.

நடந்தது என்ன
சீன ஹேக்கர்கள் முக்கியமான உள்கட்டமைப்பு அமைப்புகளைச் சுற்றியுள்ள தகவல்களை சேகரிக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு: இந்தியா-சீனா இடையே எல்லை தொடர்பான மோதல் உள்ளன. இந்நிலையில் லடாக் எல்லையில் வடஇந்தியாவில் உள்ள 7 எஸ்எல்டிசி மையங்களை சீனா குறிவைத்து செயல்பட்டு வருகிறது. கேமரா, டிவிஆர் பயன்படுத்தி புவியியல் ரீதியாக தகவல்கள் சேகரிக்க சீன ஹேக்கர்கள் முயன்று வருகின்றனர்.

வெற்றியா... தோல்வியா...
இந்த முயற்சி கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடந்துள்ளது. ஆனால் வெற்றி பெறவில்லை. மின்வினியோக மையங்கள் மட்டுமின்றி தேசிய அவரசகால அமைப்பு, பன்னாட்டு தளவாட நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனத்துக்கும் இந்த அச்சுறுத்தல்கள் உள்ளது என எச்சரித்துள்ளது.
Recommended Video

மத்திய அமைச்சர்
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் ஆர்கே சிங் கூறுகையில், ‛‛இதுபோன்ற இணை தாக்குதல்களை எதிர்கொள்ள முழுமையான பாதுகாப்பு அமைப்பை நாங்கள் ஏற்கனவே பலப்படுத்தியுள்ளோம்," என்றார்.












Click it and Unblock the Notifications