வெளி உணவுப்பொருட்களுக்கு தியேட்டர்கள் தடை விதிக்கலாம்! ஆனால் ஒரு கண்டிஷன்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: வெளியில் இருந்து மக்கள் எடுத்து வரும் உணவுப்பொருட்களை தடை செய்ய திரையங்கு நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதே சமயத்தில், திரைப்படம் பார்க்க வரும் மக்களுக்கு தூய்மையான குடிநீரை இலவசமாக வழங்குவதை திரையரங்கு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் மக்கள் கொண்டு செல்லும் உணவுப்பொருட்கள் தடை செய்யப்படுவது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திரையரங்குகளின் செயலால் அதிருப்தி
சாதாரண திரையரங்குகள் எல்லாம் மலையேறி, தற்போது டீலக்ஸ், மல்டிபிளக்ஸ் ரக திரையரங்குகள் நகரங்களை ஆக்கிரமித்து வருகின்றன. இதுபோன்ற திரையரங்குகள் மீது மக்கள் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அங்கு விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலை குறித்ததுதான். நாட்டில் எந்த நகரத்திற்கு சென்றாலும் அங்குள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 100 ரூபாய் இல்லாமல் ஒரு டீ, காபி கூட குடிக்க முடியாது. சாதாரண பாப்கார்ன் ரூ.200-க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன. தண்ணீர் பாட்டில் கூட எம்ஆர்பி-ஐ விட 10 ரூபாய் அதிகமாகவே விற்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் வெளியே இருந்து கொண்டு செல்லும் பிஸ்கட், சிப்ஸ் போன்ற உணவுப்பொருட்களுக்கும் திரையரங்கு நிர்வாகங்கள் அனுமதிப்பது கிடையாது.

காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதிரடி
திரையரங்குகளின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக விசாரித்து வந்த காஷ்மீர் உயர் நீதிமன்றம், "காஷ்மீரில் உள்ள திரையரங்குகளில் மக்கள் வெளியில் இருந்து கொண்டு செல்லும் பொருட்களை அனுமதிக்க வேண்டும். அவற்றை எடுத்துச் செல்ல தடைவிதிக்க கூடாது" என உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக அம்மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரையரங்குகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன், "திரையரங்குகள் என்பது தனியாருக்கு சொந்தமானது. அப்படி இருக்கும்போது, அங்கு என்ன எடுத்து செல்ல வேண்டும், என்ன எடுத்து செல்லக்கூடாது என்பதை தீர்மானிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கூட இதுபோன்ற தடைகள் இருக்கின்றன. இதை எப்படி தவறு என்ன கூற முடியும்?" என அவர் வாதிட்டார்.

பரபர தீர்ப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், "திரையரங்குகள் தனியாருக்கு சொந்தமானவை என்பதால் அங்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை அனுமதிப்பதற்கும், தடை விதிப்பதற்கும் அவற்றிற்கு சுதந்திரம் இருக்கிறது. எனவே, வெளியில் இருந்து கொண்டு செல்லும் உணவுப்பொருட்களை திரையரங்குகள் தடை செய்ய முடியும். அதே சமயத்தில், திரையரங்குக்குள் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்குவதை திரையரங்கு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். அதுபோல, கைக்குழந்தை, சிறார்களை அழைத்து வருவோர் அவர்களுக்கு தேவையான அளவு உணவை திரையரங்குக்குள் எடுத்துச் செல்வதை தடுக்கக் கூடாது" என தனது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications