"நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.." உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கருத்து
டெல்லி: இந்தியாவில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கிடையே பட்டாசுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சில முக்கிய கருத்துகளைக் கூறினார். பட்டாசு தடை என்பது ஏன் டெல்லியில் மட்டும் இருக்க வேண்டும் எனக் கேட்ட அவர், பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றால் நாடு முழுக்க தடை விதிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இந்தியாவில் மிகவும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தீபாவளி என்றாலே குஷியாகிவிடுவார்கள். மேலும், தீபாவளியில் அதிகாலை முதல் இரவு வரை பட்டாசு சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாகக் காற்று மாசு காரணமாகப் பட்டாசுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் பட்டாசுகளுக்கு முழுமையாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாடு முழுக்க பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.. டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்கு மட்டும் பட்டாசு தடை ஏன் என கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், பட்டாசு தடை விதிக்க வேண்டும் என்றால் அதை நாடு முழுக்க விதிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்தனர்.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசு புகையால் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லி- என்சிஆர் மக்களை மட்டும் சிறப்புக் குடிமக்களாகக் கருதி அவர்களுக்காக மட்டும் தனியாக ஒரு கொள்கையை உருவாக்க முடியாது என்று தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "டெல்லி என்சிஆர் பகுதி மக்களுக்குத் தூய்மையான காற்று கிடைக்க உரிமை இருக்கும்போது பிற நகர மக்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை? பட்டாசு தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு பட்டாசு கொள்கையும் நாடு முழுக்க அமல்படுத்தப்படும் வகையில் இருக்க வேண்டும்.
கடந்த முறை குளிர்காலத்தில் நான் அமிர்தசரஸில் இருந்தேன்.. அங்கு மாசு டெல்லியை விட மோசமாக இருந்தது. பட்டாசுகளைத் தடை செய்ய வேண்டும் என்றால், நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்" என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து நாடு தழுவிய பட்டாசு தடை கோரிய இந்த மனு குறித்து காற்று தர மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications