நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை!
டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருக்கும் முதலமைச்சர் விஜய் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முக்கிய கோரிக்கையை விஜய் முன்வைத்துள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்றப் பின்னர் விஜய் முதல் முறையாக டெல்லி சென்றிருக்கிறார். டெல்லியில் மோடியை சந்தித்த அவர், 4 கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விஜய் சந்தித்திருக்கிறார். இதற்காக அவர் தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு நிதி பகிர்வில் நீண்ட காலமாக பல கோரிக்கைகளை வைத்து வருகிறது. குறிப்பாக வரி பங்கீடு விஷயத்தில் வடமாநிலங்களை போல தமிழ்நாட்டிற்கும் போதுமான நிதி ஒதுக்குதலை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தி வந்திருந்தது.
இப்படி இருக்கையில், தற்போது விஜய் நிதியமைச்சரை சந்தித்துள்ளார். அவரது சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், "ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை புதுதில்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications