சோபியா குரேஷி.. வரலாற்று தீர்ப்புக்கு காரணமே இவர்தான்! அப்போதே அடையாளம் கண்ட உச்சநீதிமன்றம்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு தலைமையேற்ற இரண்டு பெண் அதிகாரிகளில் ஒருவர்தான் கர்னல் சோபியா குரேஷி. கடந்த 2020ம் ஆண்டே உச்சநீதிமன்றம் கொடுத்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், குரேஷியின் பெயரை மேற்கோளிட்டிருக்கிறது.
அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்திருந்தது. ராணுவத்தில் ஆண்களுக்கு மட்டும் ரிடையர் ஆகும் வரை வேலை கொடுக்கப்படுகிறது(நிரந்தர கமிஷன்), ஆனால் பெண்களுக்கு குறுகிய காலத்தில் பணி விடுப்பு வழங்கப்படுகிறது. பெண்களுக்கும் நிரந்தர கமிஷன் வேண்டும் என்பதுதான் கோரிக்கை.

இதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. "உயிரியல் அமைப்பு மற்றும் சமூக சூழலின் தன்மை காரணமாக பெண்களுக்கு நிரந்தர கமிஷன் கொடுக்கப்படக்கூடாது" என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தை அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கேட்டது. பின்னர் சந்திரசூட் தீர்ப்பை வாசித்தார். அன்று முதல் ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன், அதாவது ஓய்வு பெறும் வரை வேலை என்பது சட்டமாக்கப்பட்டது.
இதற்கு சந்திரசூட் 12 பெண் ராணுவ வீராங்கனைகளின் பெயர்களை மேற்கோள் காட்டியிருந்தார். அதில் முதல் இடத்தில் இருந்தவர்தான் குரேஷி. அப்போது அவர் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார். "சோபியா குரேஷி சர்வதேச அளவில் நடந்த ராணுவ பயிற்சியில் இந்திய படையை வழி நடத்தியிருக்கிறார். இதற்கு முன்னர் எந்த பெண்ணும் இதை செய்தது கிடையாது. அதற்கும் முன்னதாக 2006ம் ஆண்டு காங்கோவில் ஐநா அமைதிப்படையில் பணியாற்றியிருக்கிறார்.
பேர் நிறுத்தத்தை கண்காணிப்பது, மனிதாபிமான நடவடிக்கைகளில் உதவுவது, மோதல் ஏற்பட்ட பகுதியில் அமைதியை நிலை நாட்டுவது போன்ற பணிகளை செய்திருக்கிறார்" என்று கூறியிருந்தார்.
இத்துடன் லெப்டினன்ட் கர்னல் அனு வந்தனா ஜக்கி, மேஜர் மதுமிதா, லெப்டினன்ட் திவ்யா, மேஜர் கோபிகா அஜித்சிங் பவார், மேஜர் மது ராணா, பிரீத்தி சிங் அனுஜா யாதவ், கேப்டன் அஸ்வினி பவார், கேப்டன் ஷிப்ரா மஜும்தார் ஆகியோர் பெயரையும் அவர்கள் ஆற்றிய பணிகளையும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த பெண் அதிகாரிகள் கடந்த 2004ம் ஆண்டு முதல் ஐநா படையில் பணியாற்றி வருவதாகவும், சிரியா, லெபனான், எத்தியோப்பியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தீவிரமான போர்ச்சூழலிலும் இவர்கள் பணியாற்றிருப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
ஒருவேளை சோபியா குரேஷி அன்றைக்கு அந்த சாதனையை செய்யாமல் 2020ல் சந்திரசூட் தீர்ப்பு வர இன்னும் கூட தாமதமாகியிருக்கலாம். சந்திரசூட் கொடுத்த தீர்ப்பில், "நாட்டிற்காக பெண்கள் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது. பாலினத்தின் அடிப்படையில் அவர்களின் திறனை இழிவுப்படுத்துவது பெண்களின் கண்ணியத்திற்கு மட்டுமல்ல, ஆண்களின் கண்ணியத்திற்கும் அவமானமாகும்" என்று கூறியிருந்தார்.
நேற்று குரேஷி மற்றும் வியோமிகா சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் பற்றி செய்தியாளர்களிடையே அவர்களையே ராணுவம் விவரிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications