வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்தே பாஜக வெல்கிறது.. தேர்தல் ஆணையமும் உடந்தை! காங்கிரஸ் புகார்
டெல்லி: ஒரே அடையாள எண்ணுடன் பல வாக்காளர் அட்டைகள் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்த நிலையில், இதை இப்போது காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையமும் இதற்கு உடந்தையாக இருப்பதாகச் சாடியுள்ள காங்கிரஸ், இதன் மூலமாகவே பாஜக தேர்தல்களில் வெல்வதாகவும் சரமாரியாக விமர்சித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வாக்காளர்களின் அடையாள அட்டை எண்களும் ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வாக்காளர் அடையாள எண்களும் ஒன்றாக உள்ளதாக முதலில் திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், இதைக் காங்கிரஸ் கட்சியும் இப்போது கையில் எடுத்துள்ளது. வாக்காளர் அடையாள எண்கள் ஒரே போல இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், தேர்தல் ஆணையத்துடன் உதவியுடன் வாக்காளர் பட்டியலைத் திருடுவதன் மூலமாகவே ஆளும் பாஜக பல்வேறு தேர்தல்களிலும் வெற்றி பெறுகிறது அல்லது வெற்றி பெற முயல்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிவதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்திற்கே இது மிகப் பெரிய ஆபத்து எனக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், இந்தப் பிரச்சினையை ஒருபோதும் நீர்த்துப்போக விட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. சட்டம், அரசியல் உள்ளிட்ட வழிகள் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணத் தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒரே அடையாள எண்கள்
EAGLE எனப்படும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு மற்றும் நிபுணர்கள் குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதற்குத் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் காங்கிரஸின் இந்த குழு விமர்சித்துள்ளது. வெவ்வேறு மாநில வாக்காளர்கள் மட்டுமின்றி ஒரே தொகுதியில் உள்ள பல வாக்காளர்களுக்கும் இதேபோல ஒரே அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தேர்தல் ஆணைய விளக்கமும் காங்கிரஸ் புகாரும்!
முன்னதாக தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தது. அதாவது வாக்காளர் பட்டியலை ERONET எனப்படும் ஒருங்கிணைந்த லிஸ்டிற்கு மாற்றும் முன்பு இப்போது பரவலாக்கப்பட்ட முறை பின்பற்றப்படுவதாகவும் இதனால் சில அடையாள அட்டைகள் ஒரே எண்களைக் கொண்டு இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இது போலி வாக்குகளுக்கு வழிவகுக்காது என்றும் இரு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இது போல ஒரே எண்களுடன் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தது.
அதாவது ஒரு மாநிலத்தில் இருக்கும் நபருக்கும் வேறு ஒரு மாநிலத்தில் உள்ள நபருக்கும் மட்டுமே ஒரே கார்டு நம்பர் வந்திருக்கலாம்.. அதேநேரம் குறிப்பிட்ட நம்பர் அந்த மாநிலத்தில் வேறு யாருக்கும் வழங்கப்பட்டு இருக்காது என்பது போலத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தது.
ஆனால் இதையும் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், "ஒரே மாநிலத்திலும் ஒரே தொகுதியிலும் கூட பல வாக்காளர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் இருக்கிறது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகு தேர்தல் ஆணையம் மவுனத்தையே சாதிக்கிறது. நமது நாட்டில் எந்தவொரு நபரும் எங்கு வேண்டுமானாலும் இடம்பெயரலாம் என்ற போது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான வாக்காளர் அடையாள எண் தேவை என்பது அடிப்படை அறிவு. எனவே, இது தெரியாமல் நடந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது.
ஏற்க முடியாது
இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. தனித்துவமான வாக்காளர் அடையாள அட்டை என்பது வாக்காளர் பட்டியலின் அடிப்படைத் தேவையாகும். ஒரே வாக்காளர் அடையாள எண்ணைக் கொண்ட பல வாக்காளர்கள் என்பது நாட்டில் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட பல வாகனங்கள் இருப்பது போல் வினோதமானது. எந்தவொரு தேர்தல் ஜனநாயகத்திலும் இதுபோல இருக்காது.
தேர்தல் ஆணையம் உடந்தை
நியாயமான தேர்தல் என்பதை முறியடிக்கவே இதுபோல செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்காளர் பட்டியலில் மோசடி செய்தே பாஜக வெற்றி பெறுகிறது அல்லது வெற்றி பெற முயல்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் காரணமாகவே தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் செயல்முறைக்கு மோடி அரசு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது.. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையை எடுத்தது" எனச் சாடியுள்ளது.
காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டுகள் வரும் நாட்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications