இந்தியாவில் பிறந்தது பாவம் என பேசிய மோடி முதலில் மன்னிப்பு கேட்கட்டும்.. கொதித்த மல்லிகார்ஜூன கார்கே
வெளிநாட்டு பேச்சுகளுக்காக பிரதமர் மோடி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் கார்கே.
டெல்லி: தாம் இந்தியாவில் பிறக்க என்ன பாவம் செய்தோம் என பிரதமர் மோடி வெளிநாட்டில் பேசிய பேச்சுகளுக்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லண்டனில் பேசுகையில் இந்தியாவில் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை விவரித்தார். நாட்டின் நாடாளுமன்றம், நீதித்துறை, ஜனநாயக கட்டமைப்புகள் சீர்குலைக்கப்பட்டு நசுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். ராகுலின் இந்த பேச்சை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ராகுல் காந்திக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கடந்த 5 நாட்களாகவே முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், நமது நாட்டின் இறையாண்மை மீது ராகுல் காந்தி தாக்குதல் நடத்தி இருக்கிறார். வெளிநாட்டில் நின்று கொண்டு இந்திய ஜனநாயகத்தை விமர்சித்திருக்கிறார். இது தேசவிரோதம். தேசவிரோத நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது என கூறியிருந்தார் ஜேபி நட்டார்.
இதனை காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக கண்டித்துள்ளார். மல்லிகார்ஜூன கார்கே இது தொடர்பாக கூறுகையில், சுதந்திரப் போராட்டத்தில் ஒரு துளி கூட பங்களிக்காதவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள். பயங்கரமான வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிஜேபியின் உற்ற நண்பனின் மோசடி ஆகியவற்றை மறைத்து, அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப இப்படியெல்லாம் பேசுகிறார்கள்.
மோடி அவர்கள் 6-7 நாடுகளுக்குச் சென்று அன்னிய மண்ணில் 'இந்தியாவில் பிறக்க என்ன பாவம் செய்தோம் என்று இந்திய மக்கள் சொல்கிறார்கள்' என்று கூறியுள்ளார். அப்படிப்பட்டவர் எங்களை தேசவிரோதி என்கிறாரா? ஆம் பிரதமர் மோடி அவர்களே! நீங்கள் இந்திய குடிமக்களை அவமதித்துவிட்டீர்கள், நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஜேபி நட்டாவின் பேச்சை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மோடி அவர்கள் சீனா சென்றார், அமெரிக்கா சென்றார்,
தென் கொரியா சென்றார்.இந்திய குடிமக்களை அவமதித்தார் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications