100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.400ஆக உயர்வு.. தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த காங்கிரஸ்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் தனது பரப்புரையை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.
எதிர் வரும் தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இல்லாததால், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை தாரை வார்க்க வேண்டிய சூழலுக்கு கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, மூத்த தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். எனவே இந்த முறையும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை எனில், மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறியுள்ளனர்.

கட்சியை மீட்க, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தீவிரமான பிரசாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 வேலை திட்டத்தின் ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்துவதாக கூறியுள்ளார்.
மேலும், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு சமூகத்தின் பொருளாதார நிலையை உணர்ந்து திட்டங்கள் வகுக்கப்படும். ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்படும். முக்கிய அரசு பணிகளில் ஒப்பந்த பணியாளர் நியமன முறை ரத்து செய்யப்படும். தனியார் நிறுவன தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்ய சட்டங்கள் திருத்தப்படும். அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், ஆயுள், விபத்து காப்பீடு செயல்படுத்தப்படும்" என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்.
மேலும், "எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதமாக உயர்த்தப்படும். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். பழங்குடியினரின் வன உரிமைகளைப் பாதுகாப்பதற்கு காங்கிரஸ் உத்தரவாதமளிக்கிறது" என்றும் கூறியுள்ளார்.
கடந்த முறை கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை மேற்கொள்ளப்பட்ட பாரத் ஜடோ யாத்திரை ராகுல் காந்திக்கு பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. அதேபோல லோக்சபா தேர்தலை மையப்படுத்தி மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை 'பாரத் ஜயோ நியாய யாத்திரையை' ராகுல் மேற்கொண்டுள்ளார். இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
மறுபுறம், அவ்வப்போது மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களையும் காங்கிரஸ் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிஏஏ சட்டம், விவசாயிகளின் போராட்டம், ஜிஎஸ்டி அதிருப்தி, கேஸ், பெட்ரோல், டீசல் விலையுயர்வு போன்ற பிரச்னைகளை பாஜகவின் அரசியல் மைலேஜை பாதித்து வருகிறது. இந்நிலையில் இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது முக்கிய வாக்குறுதிகளை கட்சி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications