1984 சீக்கியர் படுகொலை: மாஜி காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமார் குற்றவாளி- பிப்.18-ல் தண்டனை அறிவிப்பு!
டெல்லி: 1984-ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான சஜ்ஜன்குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சஜ்ஜன்குமாருக்கான தண்டனை குறித்த விவரங்களை பிப்ரவரி 18-ந் தேதி நீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது. தற்போது மற்றொரு சீக்கியர் படுகொலை வழக்கில் சஜ்ஜன் குமார் டெல்லி திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
1980களின் தொடக்கத்தில் இந்தியாவில் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. பஞ்சாப், சண்டிகர், ஹரியானா என சீக்கியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு அமைப்பதுதான் காலிஸ்தான் தீவிரவாதிகளின் நோக்கம்.

காலிஸ்தான் விடுதலை இயக்கத்துக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தி தீவிர ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1984-ல் இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை காலிஸ்தான் விடுதலை இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. சீக்கியர்களின் புனித தலமான பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து, பதுங்கி இருந்த பஞ்சாப் விடுதலைப் படை தலைவர் பிந்தரன் வாலே உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை சுட்டுக் கொன்று அந்த இயக்கத்தை அழித்தது. இதற்கு பழிவாங்கவே 1984-ம் ஆண்டு சீக்கியர் பாதுகாவலர்களால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்திரா படுகொலையைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அப்போது காங்கிரஸ் தலைவர்களே முன்னின்று சீக்கியர்களை இனப்படுகொலை செய்தனர். காங்கிரஸின் நரவேட்டையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் செத்து மடிந்தனர். 1984-ம் ஆண்டு சீக்கியர் இனப்படுகொலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.
இந்த சீக்கியர் படுகொலை வழக்குகளில் ஒன்றில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சஜ்ஜன்குமார்.
இந்த பின்னணியில் டெல்லி சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த் சிங் என்ற சீக்கியரும் அவரது மகனும் கொல்லப்பட்ட வழக்கிலும் சஜ்ஜன் குமார் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் சஜ்ஜன்குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சஜ்ஜன்குமார் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் வரும் 18-ந் தேதி தெரிவிக்கப்படும் எனவும் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications