திரண்டு வந்த காங் தலைவர்கள்.. ஜஹாங்கிர்புரியில் தடுத்து நிறுத்தம்.. குவிக்கப்பட்ட போலீஸ்! என்னாச்சு?
டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ‛‛டெல்லி விவகாரத்தை மதத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டாம்'' என அக்கட்சியின் பொது செயலாளர் அஜய் மேக்கன் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர் புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பிலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வன்முறை நடந்த சில நாட்களிலேயே ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிட்பு கட்டிடங்களை அகற்ற பாஜக அதிகாரத்தில் உள்ள டெல்லி வடக்கு மாநகராட்சி முடிவு செய்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம்
அதன்படி 1500 போலீசார் பாதுகாப்புடன் ஜவாங்கிரிபுர் பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு டெல்லி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்றும் நடைபெற்று தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

காங்கிரஸ் கண்டிப்பு
இதற்கிடையே இந்த செயலுக்கு பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, ப சிதம்பரம், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசியும் கண்டித்துள்ளனர். இதேபோல் பாஜகவினரும் டெல்லி வடக்கு மாநகராட்சியின் நடவடிக்கைக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இதனால் டெல்லி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் விசிட்
இந்நிலையில் வீடுகளை இழந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஜஹாங்கிர்புரிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அக்கட்சியின் பொது செயலாளர் அஜய் மாகேன் தலைமையிலான தலைவர்கள் ஜஹாங்கிர்புரிக்கு காரில் சென்றனர். டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி, டெல்லி மேலிட பொறுப்பாளர் சக்தி சிங் கோகில், இம்ரான் பிரதாப்காரி உள்பட பலர் சென்றனர்.

மதத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டாம்
இதுபற்றி அஜய் மாகன் கூறுகையில், ‛‛ஜஹாங்கிர்புரியில் இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சம்பவம் பற்றி கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். எங்களுக்கு போலீசார் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து இதை மதத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டாம் என கூற உள்ளோம்'' என்றார். இதையடுத்து அவர்கள் வீடுகளை இழந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறினர்

தடுத்து நிறுத்தம்
இதையடுத்து அவர்களை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களை தடுத்து நிறுத்தினர். தங்களை அனுமதிக்கும்படி அவர்கள் கேட்டபோதும் போலீசார் தொடர்ந்து அனுமதி அளிக்காததால் அவர்கள் அங்கிருந்து திரும்பினர். அப்போது அஜய் மேக்கான் கூறுகையில், "இந்த இடிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது. நான் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக இருந்துள்ளேன். சட்டங்கள் என்ன என்பது எனக்க தெரியும். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பொய் சொல்கிறார்கள்'' என்றார்.

ஓவைசி ஆறுதல்
முன்னதாக நேற்று இரவு ஜஹாங்கிர்புரி பகுதிக்கு அசாதுதின் ஓவைசி வந்தார். வீடு, கடைகளை இழந்தவர்களுக்கு அவர் ஆறுதல் கூற முயன்ற நிலையில் அவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் அவர் போலீசாரிடம் பேசி மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications