குறைந்தபட்ச ஊதியம்.. அக்னிபாத்.. ராஜ்யசபாவில் மத்திய அரசை விளாசிய ப.சிதம்பரம்.. வைத்த 5 டிமாண்ட்
டெல்லி: மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடைபெற்றது. இதில் பேசிய சிதம்பரம், சர்ச்சைக்குரிய அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து முக்கிய கேள்விகளை மத்திய அரசுக்கு எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமை பட்ஜெட் கூட்டம் தொடங்கிய நிலையில், வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

மோடி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு நேற்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் ராஜ்யசபாவில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பியுமான ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு 5 கேள்விகளை முன்வைத்தார். ப. சிதம்பரம் கூறியதாவது:-
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை படிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதற்காக நான் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். பணவீக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதை சமாளிக்க அரசு தரப்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. பட்ஜெட்டில் பெரும்பாலான மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு கூட்டாட்சி மாநிலம் என்பதை நிர்மலா சீதாராமனுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். குறைந்த பட்ச ஊதியம் ரூ.400 என்பதை பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும். மார்ச் மாதம் வரையில் செலுத்தப்படாத கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.. சர்ச்சைக்குரிய அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்ற முக்கிய ஐந்து கோரிக்கைகளையும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து நிர்மலா சீதாராமன் எடுத்துக்கொள்ள வேன்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பக்கம் 11, 30 மற்றும் 31 ஆகியவற்றில் இருந்த நல்ல யோசனைகளை நிர்மலா சீதாராமன் தேர்வு செய்து இருக்கிறார்.
எனவே எங்கள் தேர்தல் அறிக்கையின் பல நல்ல யோசனைகளை பரிந்துரைக்குமாறு நிதி அமைச்சக அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் ஜெராக்ஸ் எடுப்பது தடை செய்யப்படவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்த வேலை வாய்ப்புடன் ஊக்கத் தொகை இணைக்கும் திட்டம் உள்பட பல யோசனைகளை நிர்மலா சீதாரமன் எடுத்து இருக்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications