கறுப்பு சட்டையுடன் காங்கிரஸ் பேரணி.. ராகுல் காந்தியை கைது செய்த போலீஸ்.. பரபரப்பில் டெல்லி!
கறுப்பை கையில் எடுத்த காங்கிரஸ்.. ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி.. பரபரப்பில் டெல்லி!
Recommended Video
டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சோனியா மற்றும் ராகுல் காந்தி தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்த வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.

இதுமட்டுமல்லாமல் விசாரணை அமைப்புகளை பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதோடு ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு, ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து, பாஜக அரசு செய்து வரும் தவறுகளையும், பொருளாதார கொள்கையையும் ஆவேசமாக விமர்சித்தார்.

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் அதிகாலை முதலே ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கூடிய நிலையில், டெல்லியிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா, ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வை திரும்பப் பெற வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியை தொடங்கியுள்ளார். இதில் ஏராளமானோர் பங்கேற்று பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி சென்ற நிலையில், காவல்துறையினர் ராகுல் காந்தியை கைது செய்துள்ளனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications