தமிழகம்-புதுச்சேரிக்கு பொறுப்பாளரை நியமித்த காங்கிரஸ்! யார் தெரியுமா? மாணிக்கம் தாகூருக்கு புதுபதவி
டெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு தமிழகத்தை சேர்ந்த 2 எம்பிக்கள் வேறு மாநிலங்களின் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மாநிலங்கள் வாரியாக கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு மூத்த தலைவர்கள் 12 பேர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்ப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான பட்டியலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக ரமேஷ் சென்னிதாலா, பீகார் மாநில பொறுப்பாளராக மோகன் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேகலாயா, மிசோரம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் பொறுப்பாளராக செல்லக்குமார் (தமிகத்தை சேர்ந்த எம்பி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் பொறுப்பாளராக அஜோய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பொறுப்பாளர் பணியையும் கவனிப்பார்.

ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளராக பரத்சிங் சோலங்கியும், இமாச்சல பிரதேசம் மற்றும் சண்டிகர் பொறப்பாளராக ராஜீவ் சுக்லாவும், ராஜஸ்தான் பொறுப்பாளராக சுக்ஜிந்தர் சிங்கும், பஞ்சாப் பொறுப்பாளராக தேவேநதர் யாதவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கோவா, டையூ மற்றும் டாமன், நாகர் ஹாவலி பொறுப்பாளராக மாணிக்ராவ் தாக்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், நாகலாந்து பொறுப்பாளராக கிரிஷ் சோதாங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஆந்திரா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவின் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர்(விருதுநகர் எம்பி), நிர்வாக பிரிவு பொறுப்பாளராக குர்தீப் சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications