காங்கிரஸ் கட்சியை மிரட்ட முயற்சிக்கிறார்கள்.. ஆனால் அடிபணிய மாட்டோம்.. ப.சிதம்பரம் ட்வீட்!
டெல்லி: அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் கட்சி அடி பணியாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி ஆகியோr பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

சோனியாவுக்கு சம்மன்
இதில் பண மோசடி நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் ராகுல் காந்தியிடன் 5 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு கடந்த ஜூன் 8ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

சோனியா காந்தி ஆஜர்
ஆனால் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இதை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டது.

காங்கிரஸ் போராட்டம்
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன் இன்று சோனியா காந்தி ஆஜரானார். இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே மத்திய அரசு அமலாக்கத்துறையை அரசியல் பழிவாங்குவதற்காக பயன்படுத்துவதாகவும், சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

ப.சிதம்பரம் ட்வீட்
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில், சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். 'யங் இந்தியா' நிறுவனம், 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனங்கள் தாக்கல் செய்த வருமானம் மற்றும் வருமான வரி கணக்கு விவரங்கள் முறையாக வருமான வரித்துறை முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அடிபணியாது
அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தை விட அமலாக்கத்துறை அதிகாரம் உள்ளதா. அமலாக்கத்துறை என்ன விசாரணை செய்ய விரும்புகிறது என்பதை உச்ச நீதிமன்றத்தில் ஆய்வு செய்ய மாட்டார்களா. அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியை மிரட்ட முயற்சிக்கிறது. இதுபோன்ற மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் கட்சி அடிபணியாது பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications