சிக்கலை கொடுத்த டிரம்ப்.. "மோடியின் இரு கொள்கைகளும் தோற்றுவிட்டது.." பாய்ந்து வந்த காங்கிரஸ்
டெல்லி: அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தாலும் அதில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரிகளை டிரம்ப் அறிவித்துள்ளார். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சித்துள்ள காங்கிரஸ், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதார கொள்கை என இரண்டுமே தோல்வி அடைந்துவிட்டதாகச் சாடியுள்ளார்.
அமெரிக்காவுடன் உலக நாடுகள் ஜூலை 31ம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என டிரம்ப் அறிவித்திருந்தார். தற்போது வரை பிரிட்டன், இந்தோனேசியா உள்ளிட்ட ஓரிரு நாடுகள் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த பல மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்கா உடன் இடைக்கால ஒப்பந்தம் போட இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கு வரி
இருப்பினும், அதில் சில காரணங்களால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே இந்தியாவுக்கு 25% வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அனைத்து பொருட்களுக்கும் 25% வரிகளை விதிப்பதாகவும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது செயல்பாட்டிற்கு வரும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாக இந்தியாவுக்குக் கூடுதலாக அபராதமும் விதிக்க போவதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு மத்திய அரசின் தோல்வியையே காட்டுவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார கொள்கை என இரண்டுமே தோல்வி அடைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.
காங்கிரஸ் விமர்சனம்
இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பி உஜ்வல் ராமன் சிங் கூறுகையில், "ராகுல் காந்தி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ந்து எழுப்பி வருகிறார். ஆனால் மத்திய அரசு இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே பேசுவதாக மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், உண்மையில் நாங்கள் எங்கள் நாட்டிற்காகப் பேசுகிறோம்.
டிரம்ப் நிலைமையை மோசமாக்குகிறார். அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப இந்தியா சமரசம் செய்ய அவர் கட்டாயப்படுத்துகிறார். இது வருத்தமளிக்கிறது. இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாம் அதை எதிர்த்துத் தான் ஆக வேண்டும். நாம் பணிந்து போக வேண்டும் என அமெரிக்கா நினைத்தால்.. அதற்குச் சரியான பதிலைச் சொல்லியே தீர வேண்டும்.

இரு கொள்கைகளும் தோல்வி
நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இதைத்தான் கூறி வருகிறோம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது. இன்று நமது பொருளாதாரக் கொள்கைகளும் தோல்வியடைந்து வருகின்றன. இந்திய நலன்களைச் சமரசம் செய்ய வேண்டி வந்தால்.. அது நமது நாட்டின் ஒற்றுமைக்கு இருந்தால்.. காங்கிரஸ் கட்சி முழு பலத்துடன் குரல் கொடுக்கும். இந்தியச் சந்தைகளில் வணிகம் செய்ய அமெரிக்கா விரும்பினால் நமது நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். இதில் எந்த சமரசமும் இருக்கத் தேவையில்லை. நாடாளுமன்றத்தில் இது தொடர்பான உண்மைகளை அவர்கள் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
ஆபரேஷன் சிந்தூர்
முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்தபோது, இந்தியா பாகிஸ்தான் மோதலை நான் தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் கூறும் நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்காதது ஏன் எனக் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், டிரம்ப்பை ஒரு பொய்யர் எனச் சொல்லும் துணிச்சல் இருக்கிறதா என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரதமர் மோடி தனது பதிலுரையில், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி யாரும் சொல்லவில்லை எனக் குறிப்பிட்டார். அதேநேரம் டிரம்ப் பெயரை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இதை விமர்சித்தே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதார கொள்கை என இரண்டும் தோல்வி அடைந்துவிட்டதாகக் காங்கிரஸ் எம்பி உஜ்வல் ராமன் சிங் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications