பிரிவினையின் உண்மையான பெற்றோர் காங்கிரஸ்தான்! வீடியோ ரிலீஸ் செய்த பாஜக.. கடும் தாக்கு
டெல்லி: நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாஜக வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்த காரணங்களை பட்டியலிட்டு பாஜக வெளியிட்ட வீடியோவில் முன்னாள் பிரதமர் நேருவை அக்கட்சி விமர்சித்துள்ளது.
முகமது அலி ஜின்னா மற்றும் அவரது முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளை நேரு ஏற்றுகொண்டாதாக இந்த 7 நிமிட வீடியோவில் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை தற்போது கொண்டாடி வருகிறது. மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பிரதமர் மோடி செங்கோட்டையில் தனது சிறப்புரையை ஆற்றுகிறார். இந்நிலையில் மறுபுறம் 1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்த காரணங்களை பட்டியலிட்டு பாஜக வெளியிட்ட வீடியோவில் முன்னாள் பிரதமர் நேருவை பாஜக விமர்சித்துள்ளது. முகமது அலி ஜின்னா மற்றும் அவரது முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளை நேரு ஏற்றுகொண்டாதாக இந்த 7 நிமிட வீடியோவில் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பிரிவினை
மேலும், "இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், நாகரீகம், விழுமியங்களை பற்றி அறியாதவர்கள், மூன்றே வாரங்களில், பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழும் மக்களுக்கு இடையே எல்லையை உருவாக்கினர். இந்த பிரிவினைவாத சக்திகளை எதிர்த்துப் போராடும் பொறுப்பில் இருந்தவர்கள் அந்தக் காலத்தில் எங்கே இருந்தார்கள்?" என்றும் கேள்வியெழுப்பி இந்த வீடியோவை பாஜக பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது 1947 பிரிவினையை விவரிப்பதாக உள்ளது.

பதிலடி
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்களை தற்போதய அரசியலுக்கு தீனியாக பயன்படுத்துவதே பாஜகவின் வேலை என காங்கிரஸ் இந்த வீடியோவுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது. இந்த வீடியோவின் வெறுப்பரசியல் தோற்கடிக்கப்படும் என்றும், , மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தி, இந்தியாவை ஒன்றிணைக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தொடரும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

விளக்கம்
மேலும், "நவீன சாவர்க்கர்களும் ஜின்னாக்களும் தேசத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைத் தொடர்கின்றனர்" என்றும் "இந்த பிரிவினைக்கு அடிப்படையாக இருந்த இரு தேசக் கோட்பாட்டை உருவாக்கியவர் சாவர்க்கர் என்றும், ஜின்னா அதை முழுமையாக்கினார்" என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, "இரு தேசக் கோட்பாட்டை முதன்முதலில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சையத் அகமது கான்தான் முன்வைத்தார். அவர் சாவர்க்கர் பிறப்பதற்கு முன்பே 1876ல் இந்த யோசனையை வழங்கினார்" என்று கூறியுள்ளார்.

தீர்மானம்
மேலும், "சாவர்க்கரும் இந்து மகாசபாவும் உண்மையில் பிரிவினை யோசனையை கடைசி வரை எதிர்த்தனர். மார்ச் 1942 இல் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் முன்மொழிந்த பிரிவினைக் கோரிக்கைகளை காங்கிரஸ் உடனடியாக ஏற்றுக்கொண்டது. நேருவின் தனிப்பட்ட நலன்களைவிட, நாட்டின் மீதான அக்கறை காங்கிரசுக்கு குறைவுதான்" என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் "1942ல் டெல்லியில் CWC தீர்மானம் இந்தியாவைப் பிரிப்பதை ஒப்புக்கொண்டது. ஜின்னா முறையான கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்பே, ராஜகோபாலாச்சாரி பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை சென்னை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். காங்கிரசும், அதன் உயர்மட்டத் தலைமையும்தான் பாகிஸ்தானின் உண்மையான பெற்றோர்" என மாளவியா கடுமையாக காங்கிரஸை சாடியுள்ளார்.
Recommended Video

துயரம்
மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ம் தேதி 'பிரிவினை பயங்கர நினைவு தினமாக' அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். 1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் புலம் பெயர்ந்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தைகள் கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications