விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம்... டெல்லியை போர்க்களமாக்கி வரும் காங்கிரஸ்
டெல்லி: விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் குவிந்துள்ளனர். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான களப்பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது.

ராகுல் பாதயாத்திரை
இதன் ஒரு பகுதியாக வரும் 7-ந் தேதி முதல் கன்னியாகுமர் முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை ராகுல் காந்தி நடத்த உள்ளார். சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவு ராகுல் காந்தி நடத்துகிற பாதயாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் படுதீவிரமாக மேற்கொண்டும் வருகின்றன.

காங். தலைவர் தேர்தல்
இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பம் ஓயாத அலைகளாக தொடருகிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சோனியா குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. ஆனால் சோனியா குடும்பத்தின் சார்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து அதிருப்தியாளர்கள் தரப்பில் சசி தரூர் போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

டெல்லியில் காங். போராட்டம்
இதனிடையே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தவும் காங்கிரஸ் முனைப்பு காட்டுகிறது. விலைவாசி உயர்வை முன்வைத்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் பிரம்மாண்ட போராட்டம் நடத்த காங்கிரஸ் வியூகம் வகுத்திருக்கிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் டெல்லியில் குவிந்துள்ளனர்.

ராகுல் மட்டும் பங்கேற்பு
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றுகிறார். சோனியாவின் தாயார் இத்தாலியில் காலமானாதால் அவரும் மகள் பிரியங்காவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்ல. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸில் இருந்து அதிருப்தியாளர்கள் வெளியேறுவது தொடர்பாகவும் ராகுல் விமர்சனங்களை முன்வைப்பார் என்பது எதிர்பார்ப்பு.

பிரசாரத்துக்கு முன்னோட்டம்
அதேநேரத்தில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள், கட்சிகளை உடைத்து ஆட்சிகளை கவிழ்ப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்பாடுகளையும் ராகுல் காந்தி பட்டியலிட்டு வெளூக்கக் கூடும். ராகுல் காந்தியின் இன்றைய பொதுக்கூட்ட உரையானது காங்கிரஸின் 2024ட தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாகவும் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications