விமானத்தில் அழுக்கு சீட்.. சம்பவம் செய்த பயணி! ரூ.1.75 லட்சம் இழப்பீடு வழங்க இண்டிகோவுக்கு உத்தரவு
டெல்லி: அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த பெண்ணுக்கு இண்டிகோ விமானத்தில் அழுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த பெண் டெல்லி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இழப்பீடாக ரூ.1.50 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ.25 ஆயிரம் என்று மொத்தம் ரூ.1.75 லட்சத்தை பயணிக்கு வழங்க அதிரடியாக உத்தரவிடப்பட்டது.
டெல்லி சாணக்கியபுரி பகுதியை சேர்ந்தவர் பிங்கி. இவர் தனது கணவர் மற்றும் 2 குடும்ப உறுப்பினர்களுடன் அஜர்பைஜானில் இருந்து டெல்லி வருவதற்காக இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தார்.

ஜனவரி 2ம் தேதி விமான பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டார். இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் தேதி அவர் இண்டிகோ விமானத்தில் 4 பேருக்கும் ரூ.48,739 செலவில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அதன்பிறகு ஜனவரி மாதம் 2ம் தேதி அவர்கள் இண்டிகோ விமானத்தில் ஏறினார்.
இந்த விமானத்தில் பிங்கி ஏறியபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை மிகவும் அழுக்காக இருந்தது. இருக்கை கிழிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிங்கி விமானப்பணி பெண்ணை அழைத்து புகார் கூறினார். விமான பணிப்பெண் அவரிடம் மன்னிப்பு கோரினார். சிரமத்துக்கு மன்னிக்கவும் என்று கூறினார். மேலும் உடனடியாக அவரால் இருக்கையை மாற்றி கொடுக்க முடியவில்லை. பிறகு 14வது வரிசையில் தனிமையாக இருந்த இருக்கையை வழங்கினார். இதனால் பிங்கி தனிமையில் விமான பயணம் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக பிங்கி சார்பில் டெல்லி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் டிக்கெட் முன்பதிவு செய்தபடி இருக்கையை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விமானத்தில் தனி இருக்கையில் அமர வைத்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் பூனம் சவுத்ரி மற்றும் உறுப்பினர் பாரிக் அகமது, சேகர் சந்திரா தலைமையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணையம் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1.75 லட்சம் வழங்க அதிரடியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவில் விமானத்தில் அழுக்கான சீட் ஒதுக்கீடு செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.1.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவுக்காக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில், ‛‛சீட் அழுக்காக இருந்ததால் மாற்று இருக்கை வழங்கப்பட்டு விட்டது'' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை நுகர்வோர் ஆணையம் ஏற்கவில்லை. அழுக்கான இருக்கை வழங்குவது என்பது விமான நிறுவனத்தில் அடிப்படை மற்றும் ஒப்பந்த கடமைகளை நேரடியாக மீறுவதாகும். இதனால் அதனை ஏற்க முடியாது என்று கூற தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications