அடுத்தடுத்த 2 அறிவிப்புகள்.. அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்.. முழு லாக்-டவுனை நோக்கி செல்லும் இந்தியா?
டெல்லி: கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுக்க மொத்தமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 343 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 7 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நாளை இந்த கொரோனா வைரஸ் இன்னும் வேகம் எடுக்கும் என்றும் எதிர்பார்ப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் ஸ்டேஜ் 2 பரவல் முறையில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்தியாவில் ஸ்டேஜ் 3 பரவல் முறையில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது.

ஊரடங்கு
இன்று இந்தியா முழுக்க ஜனதா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மக்கள் தாமாக முன் வந்து ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்து இருந்தார். அதை ஏற்று இன்று நாடு முழுக்க ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

மக்கள் வரவேற்பு
14 மணி நேரம் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். இந்தியாவில் தற்போது மக்கள் சார்பாக ஜனதா ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து உள்ளனர். டெல்லி, தமிழகம், கர்நாடகா , மேற்கு வங்கம் , குஜராத் , உத்தர பிரதேசம், பீகார் என அனைத்து மாநிலங்களிலும் இன்று மிக தீவிரமாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது.

என்ன மீட்டிங்
இந்த நிலையில் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை தலைமை செயலாளர் உடன் அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில் மக்கள் ஊரடங்கு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நாடு முழுக்க மக்கள் ஊரடங்கிற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் தாமாக முன் வந்து வீட்டிற்குள் இருக்கிறார்கள். மக்கள் இதை சுமையாக கருதவில்லை என்று கூட்டத்தில் கூறியுள்ளனர்.

நீட்டிக்க திட்டம்
இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஊரடங்கை நீடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழகம், உத்தர பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த மக்கள் ஊரடங்கை நாளை வரை நீடிக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல் நாடு முழுக்க மொத்தம் 75 மாவட்டங்கள் மொத்தமாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது.

மூடியது
இந்த 75 மாவட்டங்கள் மொத்தமாக வெளி உலகில் இருந்து மூடப்பட்டுள்ளது. இது கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாவட்டங்கள் ஆகும். தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவில் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூரில் மொத்தமாக இந்த மாதம் 31ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேறு எங்கு
இப்படி வரிசையாக அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில்தான் இரண்டு முக்கியமான அறிவிப்பு வெளியானது. தலைமைச்செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி இந்தியா முழுக்க மாநிலங்களுக்கு இடையே ஓடும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக இந்தியா முழுக்க ரயில்வே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தடைகள் எல்லாமே இந்த மாதம் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

தயார்
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுக்க மொத்தமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.இந்த தொடர் அறிவிப்புகள் எல்லாம் மக்களை தயார் படுத்ததான். மக்களின் ரியாக்சன் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு நாடு முழுக்க மொத்த தடை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தடைகளை அறிவித்துவிட்டு பின் மொத்தமாக நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications