"தப்பு தான்! வருந்துகிறோம்.." மன்னிப்பு கேட்ட மத்திய அரசு! ஏற்கவே முடியாது என மறுத்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: என்சிஇஆர்டியின் 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தச் சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பாக மத்திய அரசு மன்னிப்பு கோரிய போதிலும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதில் யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய விரும்புவதாகத் தெரிவித்தனர். அதுவரை வழக்கு விசாரணையை முடிக்கப் போவதில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
என்சிஇஆர்டி வெளியிட்ட 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் நீதித்துறையில் சவால் என்ற பாடம் இடம்பெற்று இருந்தது. அதில் நீதித்துறையில் ஊழல் என்ற பகுதி சேர்க்கப்பட்டு இருந்தது. நீதித்துறையில் உள்ள ஊழல் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த கருத்துகள் அதில் இடம்பெற்று இருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.

என்சிஇஆர்டி பாடப் புத்தகம்
நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். திட்டமிட்டு நீதித்துறையில் மட்டுமே சிக்கல் இருப்பது போலக் காட்டச் சிலர் விரும்புவதாக அதிருப்தி தெரிவித்தார். மேலும், நீதித்துறையின் ஒருமைப்பாட்டைக் களங்கப்படுத்தவோ அல்லது அதன் மதிப்பைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தவோ அனுமதிக்க மாட்டோம் எனத் திட்டவட்டமாக எச்சரித்தார்.
இதற்கிடையே இந்த வழக்கு 2வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சர்ச்சைக்குரிய பாடம் இடம்பெற்றிருந்த என்சிஇஆர்டியின் 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்தச் சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பாக, என்சிஇஆர்டி கவுன்சில் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாடத்திற்காக மத்திய அரசு மன்னிப்பு கோரியதுடன், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.
தண்டிக்கப்பட வேண்டும்
இந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். வழக்கு விசாரணையின் போது அவர், "இந்த விவகாரத்தில் நாங்கள் தீவிர விசாரணை நடத்தச் செய்ய விரும்புகிறோம். நீதித்துறையின் தலைவராக இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது கடமை.. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
மன்னிப்பு கேட்டாலும் இந்த விவகாரத்தில் யார் பொறுப்பு என்பதைக் கண்டறியும் வரை நான் இந்த வழக்கை முடிக்க மாட்டேன். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம். நீதித்துறை ஊழல் நிறைந்தது என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியச் சமூகத்திற்கு நீங்கள் கற்பித்தால், சமூகத்தில் என்ன மாதிராயன தகவல் பரவும் என நினைக்கிறீர்கள்" என்று தங்கள் கவலைகளைப் பதிவு செய்தனர்.
பறிமுதல் செய்ய உத்தரவு
புத்தகம் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அரசு கூறிய போதும், அது சந்தைகளிலும் இன்னும் கிடைப்பதாகவும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து பரவி வருவதையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். அவர் மேலும், "புத்தகம் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இப்போதும் அது விற்கப்படுகிறது. எனக்கே கூட அதன் ஒரு பிரதி கிடைத்த. இந்த விவகாரத்தால் நீதித்துறை இன்று ரத்தம் சிந்துகிறது. சர்ச்சைக்குரிய அத்தியாயம் கொண்ட அனைத்துப் புத்தகப் பிரதிகளையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும்" என்றார்.
மத்திய அரசு விளக்கம்
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இவ்விவகாரத்தை அரசு தீவிரமாகக் கருதியதாகவும், ஆட்சேபணைக்குரிய கருத்து இருக்கும் புத்தகம் வெளியானவுடனேயே விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தப் பாடத்திற்குச் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களும் எதிர்காலத்தில் இந்த அமைச்சகத்தின் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார். இதில் மத்திய அரசு நீதித்துறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
நீதிபதிகள் அதிருப்தி
ஆன்லைன் தளங்களில் இந்தச் சர்ச்சைக்குரிய பகுதிகள் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளதாகவும், அவற்றைத் தடை செய்ய மத்திய அரசுதான் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்ஸி தெரிவித்தார். சட்ட உதவி அல்லது நீதி அணுகல் குறித்த எந்த விளக்கமும் இல்லாமல், இந்த அத்தியாயம் ஊழல் மற்றும் நிலுவை வழக்குகளில் மிக அதிகமாகக் கவனம் செலுத்தியது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவம் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தவும், அதன் மாண்பைக் களங்கப்படுத்தவும் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை போல் தோன்றுவதாக உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்தது.












Click it and Unblock the Notifications