இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் வசிக்கும் வெளி நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திடீர் முடிவு எடுத்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரும் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. வெளிநாட்டினர் தங்களது பாஸ்போர்ட் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. முன்னதாக தடுப்பூசி உற்பத்தி குறைவாக இருந்ததால் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர், ஒவ்வொரு கட்டமாக முன்னுரிமை அடிப்படை அறிவிக்கப்பட்டது.

தற்போது நாட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 52 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை மூலம் ஏற்பட்ட பாதிப்பினால் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதுவரையிலும், இந்தியாவில் வசித்து வரும் வெளிநாட்டினருக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. தற்போது மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு அவர்களின் பாஸ்போர்ட்டை ஆவணமாகப் பயன்படுத்தி கோவின் தளத்தில் பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டில் வசிக்கும் அனைவர்க்கும் தடுப்பூசி போடுவது முக்கியமானதாகவும், அதிக மக்கள் நெருக்கடியினால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி செலுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரும் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. வெளிநாட்டினர் தங்களது பாஸ்போர்ட் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்ட ஒருசில வினாடிகளில் வாட்ஸ் அப்பில் சான்றிதழைப் பெற முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் பெற விரும்புவோர், +91 9013151515 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கோவிட் சர்டிஃபிகேட் என அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் ஓடிபிஐ பதிவு செய்தவுடன் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்தது தினசரி பாதிப்பு 4 லட்சம் பேரை தொட்டது. மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக தினசரி பாதிப்பு 27,429 பேராக குறைந்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படும் முன்னர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தடுப்பூசி ஒன்று மட்டுமே கொரோனாவை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications