விவசாயிகள் மீது பழி போடுவது பேசனாகிவிட்டது - மத்திய அரசை சுளுக்கெடுத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது பல மாதங்களாக தீராத பிரச்சினையாக உள்ளது. அதாவது மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
தற்போது AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 471 என்ற மோசமான அளவை எட்டி நிற்கிறது. இது இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அபாயகரமான நிலையாகும்.

விவசாயிகள் காரணமா?
வாகனங்கள் மூலம் வெளிப்படும் நச்சுபுகை, டெல்லியை சுற்றி நடைபெறும் கட்டிடப்பணிகளால் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் பயிர்களின் கழிவுகளை தொடர்ந்து தீ வைத்து எரித்து வருவதாலும் இதுவே காற்று மாசுபாடு உண்டாக்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
காற்று மாசுபாடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விவசாயிகள் பயிர்கழிவுகளை எரிப்பதே காற்று மாசுபாடுக்கு காரணம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் காற்று மாசுபாடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது.

அவசரத் திட்டம் என்ன?
அப்போது மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ''நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது உங்களுக்கு தெரிகிறதா?''. வீடுகளில் கூட நாங்கள் மாஸ்க் அணிந்திருக்கிறோம் என்று கூறினார்கள். காற்றுத் தரக்குறியீடு அளவைக் குறைப்பதற்கான அவசரத் திட்டம் என்ன? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேவைப்பட்டால் எமர்ஜென்ஸியை மேற்கொண்டு லாக்டவுனை அறிவிக்கவும் யோசனை வழங்கினார்கள்.

இதுவே பேஷனாகிவிட்டது
அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ''விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதே காற்று மாசுபாடுக்கு காரணம். இதனை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். இதற்கு கடுமையாக கொதித்தெழுந்த நீதிபதிகள் ''விவசாயிகளை வசைபாடுவது எல்லோருக்கும் இப்போது பேஷனாகிவிட்டது. விவசாயிகளால்தான் மாசு ஏற்படுகிறது என்று ஏன் கூறுகிறீர்கள்?

மற்ற காரணங்கள் என்ன?
காற்று மாசு ஏற்படுவதற்கு அவர்கள் குறிப்பிட்ட அளவு காரணமாக இருக்கிறார்கள் என்றால் காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு மற்ற காரணங்கள் என்ன? கடந்த 7 நாட்களாக டெல்லியில் எப்படி பட்டாசுகள் கொளுத்தப்படுகின்றன என்பதைப் பார்த்தீர்களா? இத்தகைய காரணங்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்கள். பிரச்சனை நீங்கள் ஊக்குவிப்பதில்தான் உள்ளது. விவசாயிகளுக்கு மாற்றுத் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை என்றால், நிலைமையை மாற்ற முடியாது என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

20 சிகரெட்டுகளை குடிப்பதற்கு சமம்
டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, ''நிலைமையின் தீவிரத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் டெல்லியில் இருப்பது என்பது ஒருவர் 20 சிகரெட்டுகளை குடிப்பதற்கு சமம்'' என்று கூறினார். இதனை தொடர்ந்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் கூறிய நீதிபதிகள், '' எங்களுக்கும் அரசுக்கும், மாநிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டெல்லியில் மாசுபாட்டை கட்டுப்படுத்த என்ன செய்கிறீர்கள்? மாசுபாட்டை கட்டுப்படுத்த சரியான திட்டம் என்ன? என்பதை 2-3 நாட்களுக்குள் எங்களுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications