கொடுமைக்குள்ளான பெண்களை சந்தித்தே தீருவேன்.. மணிப்பூர் அரசு எதிர்ப்பை மீறி கிளம்பிய ஸ்வாதி மாலிவால்!
டெல்லி: மணிப்பூர் வன்முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களைச் சந்திப்பதற்காக மணிப்பூர் மாநிலத்திற்கு புறப்பட்டார் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால். மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இப்போது வர வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்திய நிலையிலும் இன்று மணிப்பூர் புறப்பட்டுள்ளார் ஸ்வாதி மாலிவால்.
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ நாட்டையே அதிர வைத்த நிலையில், அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவலும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்த மறுநாள் அதாவது மே 4ஆம் தேதி இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளதும் தெரியவந்தது. இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூருக்குச் சென்று ஜூலை 30 வரை அங்கேயே தங்கி இருந்து, பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டு இருந்தார். தனது வருகை குறித்து முன்கூட்டியே மணிப்பூர் மாநில அரசுக்கு தெரிவித்த பின்னர் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தார். இந்நிலையில், அவரது வருகைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் மணிப்பூருக்கு செல்வதாக இருந்த நிலையில் அம்மாநில அரசு திடீரென்று எனக்கு அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியாகவும் அபத்தமாகவும் உள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேச நான் ஏற்கனவே எனது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டேன். ஏன் என்னை நிறுத்த முயற்சிக்கிறார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூர் மாநில உள்துறை இணைச் செயலாளர் ரெஹானுதீன் சௌத்ரி தனக்கு அனுமதி மறுத்ததைத் தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட்டையும் ஸ்வாதி மாலிவால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் மணிப்பூருக்கு மேற்கொள்ள உள்ள பயணத்தை தள்ளி வைக்குமாறு மணிப்பூர் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும், திட்டமிட்டபடி தான் மணிப்பூர் செல்வதாக ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். "நான் மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன், என்னைத் தடுக்காமல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களைச் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்." என அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் டெல்லியில் இருந்து மணிப்பூர் கிளம்பியுள்ளார்.

"மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் நான் செல்ல விரும்புகிறேன். இதுபோன்ற 100 வழக்குகள் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். அத்தகைய பெண்களுக்கு உதவி சென்றடைந்ததா? அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள், எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள்? சட்ட உதவி அல்லது இழப்பீடு அவர்களைச் சென்றடைந்ததா? அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? நான் சென்று அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்று ஸ்வாதி மலிவால் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications