அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு- அதிரவைத்த தணிக்கை அறிக்கை!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் முந்தைய அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியின் புதிய மதுபான கொள்கையால் அரசுக்கு ரூ.2002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபையில் முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்த கணக்கு தணிக்கை அறிக்கைகளில் இந்த இழப்பு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தை பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றியது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் அமைச்சர்கள் அண்மையில் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை கூட்டம் இன்று கூடியது.

டெல்லி சட்டசபையில் ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் தொடங்கியது. ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் முழுவதும் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
டெல்லி சட்டசபையில் இன்று முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி நிர்வாகம் தொடர்பான பல்வேறு கணக்கு தணிக்கையாளர் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. டெல்லி முதல்வர் ரேகா குப்தா இந்த அறிக்கைகளைத் தாக்கல் செய்தார். இதற்கும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மொத்தம் 14 கணக்கு தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த கணக்கு தணிக்கை அறிக்கைகளில் ஒன்று 2017-18-ம் ஆண்டு முதல் 2020-21-ம் ஆண்டு வரையிலான புதிய மதுபான கொள்கை தொடர்பானதாகும். டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின் மதுபான கொள்கையின் மூலமாக மொத்தம் ரூ.2002 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆம் ஆத்மி ஆட்சியின் மதுபான கொள்கையின் அடிப்படையிலான பல்வேறு உரிமங்கள் மூலம் அரசுக்கு எவ்வளவு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் தணிக்கை அறிக்கை விலாவாரியாக விவரித்திருக்கிறது.
சர்ச்சைக்குரிய இந்த ஆம் ஆத்மி ஆட்சி கால மதுபான கொள்கை முறைகேடு வழக்குகளில்தான் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வ மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டெல்லியில் 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சி சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவ இந்த மதுபான கொள்கை முறைகேடு மிக முக்கிய காரண்மாகவும் சொல்லப்பட்டது. ஏனெனில் ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் ஊழல் தலை விரித்தாடியது என்பதை வெட்டவெளிச்சமாக்கியதுதான் இந்த மதுபான கொள்கை முறைகேடு என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications