டெல்லி சட்டமன்ற தேர்தல்.. பிரச்சாரம் ஓய்ந்தது! பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி!
டெல்லி: டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்துள்ளது. இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள 70 சட்டபேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி தற்போது ஆட்சியில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது. இதனால், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதில் ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது.

டெல்லி சட்டசபை தேர்தல்
மத்தியில் ஆளும் பாஜக, தலைநகர் டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதேபோல மற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரசும் டெல்லியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. எனினும் டெல்லியில் ஆம் ஆத்மி - பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.
பாஜக தேர்தல் வாக்குறுதிகள்
வாக்காளர்களை கவரும் விதமாக கவர்ச்சிரக அறிவிப்புகளையும் மூன்று கட்சிகளும் வெளியிட்டுள்ளன. பாஜக தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் அளிக்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போது ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக தலா ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகள்
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான காப்பீடு வசதி வழங்கப்படும்" உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதத்திற்கு ரூ.2,100 நிதி உதவி, அனைத்து பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் மற்றும் டெல்லி மெட்ரோவில் 50% தள்ளுபடி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இன்றுடன் பிரசாரம் ஓய்வு
கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்ட்டு வருகின்றன. பிரதமர் மோடி நேற்று டெல்லி ஆர் கே புரம் பகுதியில் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். அரசியல் கட்சி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications