டெல்லியில் நாளை தேர்தல்- கும்பமேளாவில் பிரதமர் மோடி புனித நீராடுவதா? எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் வாக்குப் பதிவு நாளை நடைபெறும் போது உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று புனித நீராடுகிறார். பிரதமர் மோடியின் மகா கும்பமேளா பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லி வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் பங்கேற்பது தேர்தல் விதிமீறல் எனவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.

இந்த கும்பமேளாவில் அண்மையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதேபோல சாதுக்கள், பக்தர்களின் கூடாரங்களில் தீ விபத்துகளும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன.
இம்மகா கும்பமேளாவில் தொழிலதிபர்கள், வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். பூடான் பிரதமர் இன்று இன்று மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
அதேநேரத்தில் டெல்லியில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப் பதிவு நடைபெறும் நேரத்தில் மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி பங்கேற்பது என்பது மறைமுகமாக டெல்லி வாக்காளர்களை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்; இது தேர்தல் விதிமீறலாகும். பிரதமர் மோடி, டெல்லி தேர்தல் நாளில் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடக் கூடாது என ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியின் கும்பமேளா பயணம் இப்போது சர்ச்சைகளின் மையமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications