ஆம் ஆத்மி தொண்டர்களை போலீஸ் மிரட்டுகிறது.. தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி முதல்வர் அதிஷி கடிதம்
டெல்லி: டெல்லியில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், அம்மாநில முதல்வர் அதிஷி தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தங்கள் கட்சியினரை போலீசார் மிரட்டுவதாகவும் பொய்யான அறிக்கைகளில் கையெழுத்திட அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள அதிஷி, சம்பந்தப்பட்ட போலீசாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் இப்போது ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் சூழலில், பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரச்சாரம் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி முதல்வர் அதிஷி பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதிஷி புகார்:
அதில் கடந்த ஜனவரி 21, 22ஆம் தேதிகளில் ஆம் ஆத்மி தொண்டர்களை மிரட்டியதாக ஆம் ஆத்மி சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் முடக்க முயல்வதாக அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட போலீசாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
வன்முறை அல்லது மிரட்டல் எதுவும் நடைபெறவில்லை என்று போலி லெட்டர்களில் கையெழுத்திட ஆம் ஆத்மி கட்சியினருக்கு போலீசார் அழுத்தம் கொடுப்பதாகவும் டெல்லி முதல்வர் அதிஷி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிஷி கடிதம்:
அந்த கடிதத்தில் முதல்வர் அதிஷி மேலும் கூறுகையில், "ஜனவரி 21, 22ம் தேதிகளில் ஆம் ஆத்மி கட்சியினரை பாஜகவினர் மிரட்டியது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்திருந்தேன். இந்த புகார்களை விசாரிப்பதற்குப் பதிலாக, பாஜகவினரால் மிரட்டப்பட்ட எங்கள் ஆம் ஆத்மி தொண்டர்களை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கிறார்கள்.
அப்படி அழைத்துச் சென்று மிரட்டல் எதுவும் இல்லை எனப் போலி கடிதத்தில் லெட்டர் எழுதி வாங்கி வழக்கை முடித்து வைக்க போலீசார்முயல்கிறார்கள். எங்கள் தொண்டர்கள் என்ன நடந்தது என்பதை தங்கள் வழக்கறிஞர் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக எழுதித் தரத் தயாராகவே உள்ளனர். ஆனால், இந்த வழக்கைச் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காகப் பொய்யான லெட்டர்களில்கையெழுத்திடுமாறு எங்கள் தொண்டர்களை போலீசார் கட்டாயப்படுத்துகிறார்கள்.
இடமாற்றம் செய்ய வேண்டும்:
இதற்கு எங்கள் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகே அந்த போலி லெட்டர்களை போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர். டெல்லியில் தேர்தல் நடக்கும் நிலையில், போலீசார் இதுபோல ஒருதலைபட்சமாக நடைபெறுவது ஏற்க முடியாது. எனவே, சம்மந்தப்பட்ட போலீசாரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த வாரத் தொடக்கத்திலும் அதிஷி தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் கல்காஜி பகுதியில் வாக்காளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் துணை ராணுவப் படைகளைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி போலீசார்:
பொதுவாக மாநிலங்களில் காவல் துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே வரும். ஆனால், டெல்லி என்பது யூனியன் பிரதேசமாகும். அங்குக் காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராது. நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் தான் காவல் துறை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications