இடைக்கால ஜாமீன் முடிந்தது! திகாரில் சரண் அடைந்தார் கெஜ்ரிவால்.. ரிசல்ட் வரும்போது ஜெயிலில் இருப்பார்
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று மாலை திகார் சிறையில் சரணடைந்தார். ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது ஜூன் 5ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறிய நிலையில், அவர் இன்று திகார் சிறையில் சரணடைந்தார். சரண் அடைவதற்கு முன்பாக காந்தி நினைவிடம், அனுமன் கோவிலுக்கு சென்று கெஜ்ரிவால் வழிபட்டார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2 ஆம் அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனுவில், எனது எடை மிகவும் குறைந்துள்ளது. ஒருவருக்கு எவ்வித காரணமும் இல்லாமல் ஒரு மாதத்தில் 7 கிலோ எடை குறைந்தால் அது தீவிர பிரச்சினை. எனவே, மருத்துவர்கள் எனக்கு பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரை செய்துள்ளனர். அனைத்துபரிசோதனைகளும் செய்தால்தான், உள்ளே ஏதாவது தீவிர நோய் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். எனவே நான் சிறையில் மீண்டும் சரணடைய 7 நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கோரி இருந்தார்.
அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளிவைத்துள்ளது. ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என உத்தரவிட்டது.
டெல்லியில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "தேர்தல் பிரச்சாரம் செய்ய உச்ச நீதிமன்றம் எனக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்தது. நான் மீண்டும் திகார் சிறைக்கு செல்வேன். இந்த முறை இவர்கள் என்னை எவ்வளவு காலம் சிறையில் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் என் உற்சாகம் அதிகமாக உள்ளது.
சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற சிறைக்கு செல்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். அவர்கள் என்னை பல வழிகளில் உடைக்க முயன்றனர், என்னை மௌனமாக்க முயன்றனர், ஆனால் அவர்கள் வெற்றி பெறவில்லை. நான் சிறையில் இருந்தபோது, அவர்கள் என்னை பல வழிகளில் சித்திரவதை செய்தனர். என் மருந்துகளை நிறுத்திவிட்டார்கள். இந்த மக்கள் என்ன விரும்பினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஜூன் 2 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சரணடைய எனது வீட்டை விட்டு வெளியேறுவேன். ஆளும் கட்சி இந்த முறை என்னை சிறையில் மேலும் சித்திரவதை செய்யக்கூடும். ஆனால் நான் தலைவணங்க மாட்டேன்... நான் எங்கு வாழ்ந்தாலும், உள்ளேயோ அல்லது வெளியேயோ நான் நானாகவே இருப்பேன். நான் சிறையில் இருந்தாலும் டெல்லியின் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாது. டெல்லியின் பணியை நிறுத்த விடமாட்டேன்." எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து கிளம்பிய அரவிந்த் கெஜ்ரிவால் காந்தி நினைவிடம், அனுமன் கோவிலுக்கு சென்று கெஜ்ரிவால் வழிபட்டார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் திகார் சிறைக்கு சென்று சரண் அடைந்தார்.
சரண் அடைவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், "அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி வெற்றி பெறும். சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக மீண்டும் நான் சிறைக்கு செல்கிறேன். சர்வாதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். என் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்வேன்" என்று கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால், நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி (நாளை மறுநாள்) வெளியாக இருக்கும் நிலையில் இன்று சிறைக்கு சென்றுள்ளார். ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது ஜூன் 5ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளதால் ரிசல்ட் வரும் நாளிலும் அவர் சிறையில் தான் இருப்பார்.












Click it and Unblock the Notifications