ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு வழக்கமான ஜாமீன்.. சற்றே நிம்மதி?
டெல்லி : ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியது. முன்னதாக இந்த வழக்கில் இருவரும் முன்ஜாமீனில் இருந்தனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தங்களுக்கு தேவையான சட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் தங்களுக்கு வழக்கமான ஜாமீன் வழங்க வேண்டுமென ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications