டெல்லியை அதிர வைத்த பத்திரிகையாளர் சவுமியா கொலை வழக்கு.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை.. கோர்ட் அதிரடி
டெல்லி: நாட்டையே உலுக்கிய டெல்லி பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த சவுமியா விஸ்நாதன் (வயது 25) என்ற இளம்பெண் பணி முடிந்து அதிகாலை தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டு இருந்த சவுமியா விஸ்வநாதன், ஒரு காரை ஓவர்டேக் செய்து சென்றார். அப்போது, பின்னால் வந்த காரில் இருந்த கபூர், சுக்லா, குமார், மாலிக் ஆகிய 4 பேர், காரில் தனியாக சவுமியா விஸ்வநாதன் சென்றதை பார்த்தனர். உடனடியாக அவரிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் காரை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் சவுமியா விஸ்வநாதன் காருக்கு குறுக்கே சென்று காரை நிறுத்த முயற்சித்தனர்.
துப்பாக்கியால் சுட்டனர்: ஆனால், ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை அறிந்த சவுமியா விஸ்வநாதன் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால், ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் தங்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் சவுமியா விஸ்வநாதனை துப்பாக்கியால் சுட்டது. இதில் துப்பாக்கி குண்டு நெற்றியில் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே சவுமியா பலியானார். காரும் நெல்சன் மண்டேலா மார்க் சாலையின் டிவைடரில் மோதி நின்றது.
உடனடியா சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய கொலையாளிகள் 20 நிமிடம் கழித்து மீண்டும் வந்தனர். அதற்குள் போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு வந்ததால் கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கியது. சவுமியா விஸ்வநாதன் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடக்கத்தில் கொள்ளையர்கள் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறினர்.
ஆயுள் தண்டனை: ஆனால், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், அமித் சுக்லா, அஜய்குமார், பல்ஜீத் மாலிக், ரவி கபூர் மற்றும் அஜய் சேதி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கடுமையான மோக்கா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை விசாரணை முடிந்து கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி தீர்பளித்த நீதிமன்றம் 4 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தது.
இதையடுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5-வது நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரிதிலும் அரிதான குற்றங்களில் வரவில்லை என்றும் அதனால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் கூறியது.












Click it and Unblock the Notifications