ஆப்கான் தீவிரவாதிகளின் புகலிடமாக கூடாது- 8 நாடுகள் மாநாடு வலியுறுத்தல்- பாக்,சீனா ஆப்சென்ட்!
டெல்லி: தாலிபான்கள் வசமாகி இருக்கும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாகிவிடக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டு பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் பாகிஸ்தான், சீனா புறக்கணித்தன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசமானது.
ஆப்கானிஸ்தானில் வழக்கம் போல தாலிபான்கள் மிக கொடூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் கடந்த காலங்களைப் போல இல்லாமல் இம்முறை சர்வதேச சமூகத்தின் நல்லுறவை தாலிபான்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா எச்சரிக்கை
இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் தாலிபான்கள் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்னொரு பக்கம் தாலிபான்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் பாகிஸ்தான், சீனா போன்றவை ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சதி ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தொடக்கம் முதலே நமது தரப்பில் இதனை எதிர்த்து வருகிறோம். அதேபோல் தாலிபான்களும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எங்களை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.

டெல்லி ஆலோசனை
தாலிபான்களை அணுகுவது; ஆப்கானிஸ்தானை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக சர்வதேச நாடுகள் பல்வேறு கட்ட விவாதங்கள், ஆலோசனைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதன் ஒருகட்டமாக டெல்லியில் 10 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் பாகிஸ்தானும், சீனாவும் பங்கேற்கவில்லை.

டெல்லியில் 8 நாடுகள் ஆலோசனை
இன்றைய கூட்டத்தில் ஈரான், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவற்றின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்தியாவுடன் சேர்த்து டெல்லியில் இன்று 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஒன்று கூடி ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆராய்ந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆப்கான் தொடர்பான பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது.

பிரகடனம் சொல்வது என்ன?
இப்பிரடகனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானை தீவிரவாதிகள் புகலிடமாக, பயங்கரவாத செயல்பாடுகளுக்கான இடமாகவோ, சதித் திட்டம் அல்லது நிதி உதவி பெறுகிற பிராந்தியமாகவோ மாற்ற அனுமதிக்கக் கூடாது. அண்மையில் காபூல், கந்தகார், குந்தூஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் உள்விவகாரங்களில் எந்த ஒரு நாடும் தலையிடக் கூடாது. தாலிபான்கள் வசமான பின்னர் ஆப்கான் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றன.

இணைந்து செயல்பட முடிவு
இந்த பிராந்தியத்தில் போதைப் பொருட்கள் கடத்தல், பயங்கரவாத செயல்கள், பிரிவினைவாத செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக எட்டு நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிகழும் மாற்றங்கள் அண்டை நாடுகளில் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஆய்வு செய்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு டெல்லி பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications