அதிகாலையில் அதிர்ந்த டெல்லி.. கவனமாக இருங்க! பதற்றப்பட வேண்டாம்.. மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் மக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகளுக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் அமைதியாக அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை கேட்டு பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 5.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை மட்டும் இன்றி பிற வட மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது.

டெல்லியில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் நிலையில் அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்து பீதி அடைந்தனர். புது டெல்லி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அச்சமடைந்தனர். புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் தன் கடையில் உள்ள பொருட்கள் எல்லாம் திடீரென ஆடுவதை பார்த்து அதிர்ச்சி ஆகியுள்ளார்.
என்ன இது? என்று தெரியாமல் தவித்ததும், பின்னர் செய்திகளில் வந்ததை பார்த்து தான் தெரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார். இதேபோல் ரயில் நிலையங்களில் நின்றிருந்த ரயில்களிலும் இதனை பயணிகள் உணர்ந்ததாக தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி சீனாவின் சின் சான் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 7 க்கும் அதிகமாக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரை உணர முடிந்தது. அதேபோல் கடந்த ஜனவரி 11ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக டெல்லியிலும் லேசாக நில அதிர்வு ஏற்பட்டது. தலைநகர் டெல்லி மற்றும் வட இந்தியாவில் அடிக்கடி ஏற்படும் நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.
இந்த நிலையில் டெல்லி நில அதிர்வு குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகளுக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் அமைதியாக அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை கேட்டு பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- "டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அனைவரும் அமைதியாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் வலியுறுத்துகிறேன். நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகளுக்கு வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். யாரும் பதற்றப்பட வேண்டாம்" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications