டெல்லியில் தோற்ற அரவிந்த் கெஜ்ரிவால்.. பஞ்சாப் முதல்வராக திட்டம்? கொளுத்திப் போடும் காங்கிரஸ்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்ததாக மேற்கொள்ள இருக்கும் அரசியல் நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியில் நீடித்து வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்டி கட்சியை வலுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில முதல்வராக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைபற்றியுள்ளது. 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களில்தான் வென்றது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், 3 முறை முதல்வராக இருந்தவர். ஆனாலும் புதுடெல்லி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதேபோல அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி உள்ளிட்ட பலரும் படுதோல்வியை சந்தித்தனர். இதனால் ஆம் ஆத்மி கட்சி கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் பெரும் தோல்வியை எதிர்கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த திட்டம் என்ன என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்த விவாதங்களில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா பரபரப்பான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூறிய பாஜ்வா, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் மான் இருந்து வருகிறார். ஆனால் பகவந்த் மானுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியில் பெரும் சலசலப்பு இருந்து வருகிறது. டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவரான அமான் அரோரா, பஞ்சாப்பில் இந்து ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் ஆம் ஆத்மியின் நோக்கம். இது விரைவில் நடைபெறும் என கூறியிருந்தார். அவரது கருத்தின் அடிப்படையில் பார்த்தால் டெல்லியில் தற்போது தோல்வி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், விரைவில் பஞ்சாப் முதல்வராகக் கூடிய சாத்தியம் இருக்கிறது; பஞ்சாப் மாநிலம் லூதியானா சட்டசபை தொகுதி காலியானதாக இருக்கிறது; இத்தொகுதி இடைத்தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடவும் வாய்ப்புள்ளது என்கிறார். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் இது தொடர்பாக எந்த விளக்கமும் தரப்படவும் இல்லை.












Click it and Unblock the Notifications