டெல்லி தேர்தல்: பாஜக 45.56%; ஆம் ஆத்மி 43.57%.. 2% வாக்கு வித்தியாசத்தில் கோட்டையை இழந்த கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது பாஜக. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜகவின் ஆட்சி அமைகிறது. டெல்லி தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான வாக்கு சதவீத வேறுபாடு என்பது வெறும் 2%தான்.. ஆனாலும் 10 ஆண்டுகால ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்து நிற்கிறது ஆம் ஆத்மி கட்சி.
2013-ம் ஆண்டுதான் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக தேர்தல் களத்துக்கு வந்தது. அந்த தேர்தலில் 28 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி 29.5% வாக்குகளைப் பெற்றிருந்தது.

2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பிரம்மாண்ட அதிரடி வெற்றியைப் பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. 2015 தேர்தலில் ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதமும் இருமடங்காக உயர்ந்து 54.3% ஆக உயர்ந்தது.
2020-ம் ஆண்டு தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி மிரட்டலான வெற்றியைப் பெற்றது. அந்த தேர்தலில் 62 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சிக்கு 53.57% வாக்குகள் கிடைத்தன. 2020-ல் 8 இடங்களைப் பெற்ற பாஜகவுக்கு 38.51% கிடைத்திருந்தன. ஒரு இடத்தில் கூட வெல்லாத காங்கிரஸ் கட்சி வாக்கு சதவீதம் 4.26%.

தற்போதைய 2025 சட்டசபை தேர்தலில் டெல்லி முடிவுகள் தலைகீழாக அமைந்துவிட்டன. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48; ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. டெல்லியில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். பெரும்பான்மைக்கும் அதிகமாக 12 இடங்களைப் பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் ஆட்சியை அமைக்கிறது.
10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 2025 தேர்தல் பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. 22 இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 10% அளவுக்கு சரிந்துள்ளது. ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 43.57% ஆக குறைந்துள்ளது.

48 இடங்களைக் கைப்பற்ற பாஜகவின் வாக்கு சதவீதம், 2020-ம் அண்டு தேர்தலை விட 7% கூடுதலாக பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டு 38.51% வாக்குகளைப் பெற்ற பாஜக தற்போதைய தேர்தலில் 45.56% வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 2% வாக்குகளைக் கூடுதலாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 6.34%.
டெல்லி தேர்தல் முடிவுகள், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை ஒப்பிடுகையில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இணைந்து 'இந்தியா' கூட்டணியாக தேர்தலை எதிர்கொண்டிருந்தால் பாஜகவால் ஆட்சியை கைப்பற்றி இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications