டெல்லி தேர்தல் ரிசல்ட்: கெஜ்ரிவால், அதிஷி, விஜேந்தர் குப்தா-அத்தனை கண்களும் இந்த 10 தொகுதிகளில்தான்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகளும் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. டெல்லியில் மொத்தம் 60.54% வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

டெல்லி தேர்தல் களத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ள 10 விஐபி தொகுதிகள்:
கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதி
டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் தொகுதி புதுடெல்லி. இத்தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீட்சித் (முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகன்) போட்டியிடுகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் இத்தொகுதியில் 2013, 2015, 2020 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து வென்றவர். 2020-ம் ஆண்டு தேர்தலில் 21,687 வாக்குகளில் அர்விந்த் கெஜ்ரிவால் வென்றிருந்தார்..
முதல்வர் அதிஷி போட்டியிடும் கல்காஜி
டெல்லி முதல்வர் அதிஷி போட்டியிடும் தொகுதி கல்காஜி. பாஜகவின் ரமேஷ் பிதுரி, காங்கிரஸின் அல்கா லம்பா எதிர்த்து போட்டியிடுகின்றனர். 2020-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் தரம்பீர் சிங்கை 11,393 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி தோற்கடித்தார்.
சோம்நாத் பார்தி போட்டியிடும் மால்வியா நகர்
ஆம் ஆத்மி மூத்த தலைவரான சோம்நாத் பார்தி மால்வியா நகரில் போட்டியிடுகிறார். மால்வியா நகர் தொகுதியில் 3 முறை பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றவர் சோம்நாத் பார்தி. தற்போது பாஜகவின் சதீஷ் உபாத்யாய், காங்கிரஸின் ஜிதேந்திர குமார் கோச்சார் ஆகியோரை மால்வியா நகரில் எதிர்கொள்கிறார் சோம்நாத் பார்தி. 2015, 2020 தேர்தல்கலளில் சுமார் 50%-க்கும் அதிகமான வாக்குகளை சோம்நாத் பார்தி பெற்றிருந்தார்.
பாஜகவின் விஜேந்தர் குப்தா வென்ற ரோஹினி
பாஜக மூத்த தலைவர் விஜேந்தர் குபா 2 முறை வென்ற தொகுதி ரோஹினி. 2015, 2020-ல் விஜேந்தார் குப்தா வென்ற இத்தொகுதியில் ஆம் ஆத்மியின் பிரதீப் மிட்டல் கடும் போட்டியை கொடுத்து வருகிறார். 2020 தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் ராமேஷ் நமா பன்ஷிவாலாவை 12,000 வாக்குகளில் தோற்கடித்தார் விஜேந்தர் குப்தா.
மணீஷ் சிசோடியா களம் காணும் ஜங்புரா
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா களம் காணும் தொகுதி ஜங்புரா. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்தவர். மணீஷ் சிசோடியாவை எதிர்த்து பாஜகவின் தர்வீந்தர் சிங் மார்வா, காங்கிரஸ் பர்ஹத் சூரி போட்டியிடுகின்றனர். 2020-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பிரவீன் குமார் சுமார் 15,000 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
கிரேட்டர் கைலாஷ் தொகுதி
ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவரான சவுரவ் பரத்வாஜ், 2013-ம் ஆண்டு முதல் தொடர்ந்து போட்டியிட்டு வென்று வரும் தொகுதி இது. தற்போது பாஜகவின் ஷிகா ராய், காங்கிரஸின் கார்வித் சிங்வி போட்டியிடுகின்றனர்.
பட்பார்கஞ்ச்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கோட்டையாக கருதப்படும் தொகுதி இது. கடந்த 3 தேர்தல்களில் தொடர்ந்து மணீஷ் சிசோடியா வென்ற தொகுதி. தற்போது ஆம் ஆத்மியின் ஆவாத் ஓஜா இத்தொகுதியில் களம் காண்கிறார். பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி, காங்கிரஸின் அனில் சவுத்ரி ஆகியோர் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.
ஓஹ்லா
ஆம் ஆத்மியின் மற்றொரு மூத்த தலைவர் அமானுல்லா கான் மீண்டும் இத்தொகுதியில் களம் காண்கிறார். 2 முறை இத்தொகுதியில் வென்ற அமானுல்லா கான் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்பது எதிர்பார்ப்பு. காங்கிரஸின் அரிபா கான், பாஜகவின் மணீஷ் சவுத்ரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பல்லிமரான்
டெல்லியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ள தொகுதி பல்லிமரான். சாந்தினி சவுக் லோக்சபா தொகுதிக்குட்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக இம்ரான் ஹூசைன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரூன் யூசுப், பாஜகவின் கமால் பாக்ரி ஆகியோர் களம் காண்கின்றனர்.
சத்தார்பூர்
ஆம் ஆத்மியின் பிரம் சிங் தன்வார், பாஜகவின் கர்தார் சிங் தன்வார், காங்கிரஸ் ராஜேந்தர் சிங் தன்வார் களம் காணும் தொகுதி. 2020-ம் ஆண்டு ஆம் ஆத்மி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற கர்தார் சிங் தன்வார் இம்முறை பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications