விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு- சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக சீக்கிய மத குரு ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 21-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து.
விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டம் நீடிக்கும் என்பது விவசாயிகளின் நிலைப்பாடு. இந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையிலு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போதும் சில விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.

சீக்கிய மதகுரு
இந்த நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சீக்கிய மதகுரு ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவை சேர்ந்தவர் சீக்கிய மதகுரு சந்த் பாபா ராம் சிங் (வயது 65).

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இவர் போராட்டம் நடைபெறும் சிங்கு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள டெல்லி- சோனிபட் எல்லையில் உள்ள குண்ட்லி பகுதிக்கு இன்று வருகை தந்தார். அங்கு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தம்மை தாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.

நீதி வழங்கவில்லையே
இதனையடுத்து பானிபட்டில் உள்ள பார்க் மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் ராம்சிங் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மதகுரு பாபா ராம்சிங் எழுதி வைத்த கடிதத்தில், உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளின் வலியை என்னால் உணர முடிகிறது. விவசாயிகளுக்கு அரசு உரிய நீதி வழங்காததன் வலியை பகிர்ந்து கொள்கிறேன்.

போராட்டத்துக்காக உயிரை தருகிறேன்
நீதி வழங்காததும் பாவம்; அநீதியை சகித்துக் கொண்டிருப்பதும் பாவமே. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பலர் விருதுகளை திருப்பிக் கொடுத்தனர். நான் என்னுடைய உயிரையே அந்த போராட்டத்துக்கு ஆதரவாக தியாகம் செய்கிறேன் என எழுதி வைத்துள்ளார். சீக்கிய மதகுருவின் இந்த உயிர் தியாகம் டெல்லியில் போராடும் விவசாயிகளை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications