ஸ்மிருதி இரானிக்கு கிடைத்த வெற்றி! மகளை பற்றிய ட்வீட்டை அகற்ற காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கோர்ட் கெடு
டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் சட்டவிரோதமாக பார் நடத்துவதாக காங்கிரஸ் எம்.பிக்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டியுள்ளதால் குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வேலைவாய்ப்பு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் விவாதமாக எழுப்பினர். இது போராட்டமாக வெடித்ததையடுத்து காங்கிரஸ், திமுக என சுமார் 27 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

குற்றச்சாட்டு
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா மற்றும் நெட்டா டிசோசா ஆகியோர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் 18 வயது மகள் ஸோய்ஸ் இரானி கோவாவில் சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரதிநிதியாக அமைச்சராக உள்ள ஒருவரின் மகள் எப்படி இவ்வாறு செய்யலாம் என்றும் கேள்வியெழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக ஸ்மிருதி இரானியை அமைச்சரவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் காங். எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.

சட்டவிரோத பார்
மேலும் அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளதாவது, "ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி கோவாவின் அஸ்ஸாகாவோ பகுதியில் சொகுசு மதுபான விடுதி மற்றும் ரெஸ்டாரன்டை நடத்தி வருகிறார். இந்த பாரின் உரிமம் முடிந்ததையடுத்து அந்தோணி காமா என்கிற பெயரில் மீண்டும் உரிமத்திற்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்தோணி காமா கடந்த 2021லேயே உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த பார் தொடர்பாக ஸோய்ஸ் இரானி போலியான பத்திரங்களை அளித்துள்ளார். இது தொடர்பாக சுங்க வரித்துறையினருக்கு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன" என கூறியுள்னர்.

நோட்டீஸ்
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், எனவே இது குறித்து விளக்கமளிக்க வேண்டியதில்லை என்றும் ஸ்மிருதி இரானி கூறியிருந்தார். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் எம்.பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வலியுறுத்தியதோடு அல்லாமல் காங். எம்.பிக்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நோட்டீஸையும் அனுப்பி இருந்தார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கோரவில்லையெனில் சிவில் குற்ற வழக்கு அவர்கள் மீது தொடுக்கப்படும் என்றும் ஸ்மிருதி எச்சரித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் எம்.பிக்கள் மன்னிப்பு கேட்கவில்லை.

உத்தரவு
இதனையடுத்து காங். எம்.பிக்கள் மீது சிவில் குற்ற வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஸ்மிருதி இரானி தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது ஸ்மிருதி இரானியின் மகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங். எம்.பிக்கள் வெளியிட்டதாக நீதிமன்றம் கூறியது. மேலும் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு வெளியிட்ட எம்.பிக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த தகவல்களை டெலிட் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் நீதிமன்றம் இதில் தலையீடு செய்து டெலிட் செய்யும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா மற்றும் நெட்டா டிசோசா ஆகியோருக்கு நீதிபதி மினி புஷ்கர்ணா சம்மன் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications