மூச்சு முட்டுது! "Air purifiers-களின் ஜிஎஸ்டி வரியை ஏன் குறைக்கக் கூடாது"? டெல்லி ஹைகோர்ட் கேள்வி
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் ஏர் பியூரிஃபையர்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ஏன் குறைக்கக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கான பதிலை 10 நாட்களுக்குள் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர். டெல்லியில் காற்று மாசால் மூச்சு முட்டும் அளவுக்கு சூழல் இருக்கிறது.
Air purifier எனும் காற்று சுத்திகரிப்பான்களை 'மருத்துவச் சாதனங்கள்' என்று வகைப்படுத்தக் கோரிய பொதுநல வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு இருக்கும் காலங்களில் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த சாதனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக அந்த வழக்கில் வாதிடப்பட்டது.

இப்போது காற்று சுத்திகரிப்பான்களுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அவை மருத்துவச் சாதனங்களாக அறிவிக்கப்பட்டால், இந்த வரி 5% ஆகக் குறையும். இவை, மின்விசிறியின் மூலம் மாசுபட்ட வீட்டுக் காற்றை உள்ளிழுத்து, ஹெபா (HEPA) மற்றும் ஆக்டிவேட்டட் கார்பன் (activated carbon) போன்ற வடிகட்டிகள் வழியாகச் செலுத்தி காற்றைச் சுத்திகரிக்கின்றன.
இந்த வடிகட்டிகள் தூசு, மகரந்தம் போன்ற மிகச் சிறிய துகள்களையும், வாயுக்கள், நாற்றங்கள் மற்றும் புகையையும் உறிஞ்சி, சுத்தமான காற்றை அறைக்குள் வெளியிடுகின்றன. காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், குறிப்பாக டெல்லி-என்.சி.ஆர் மற்றும் பிற பெரிய நகரங்களில் இவற்றின் தேவை அதிகரித்துள்ளது.
2024-ல், நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. பிலிப்ஸ், டைசன் போன்ற முன்னணி பிராண்டுகளுடன் சியோமி, ஹனிவெல், டாய்கின் போன்ற நிறுவனங்களும் இந்த பியூரிஃபையர்களை விற்பனை செய்கின்றன. இவற்றின் விலை ரூ. 3,000 முதல் ரூ. 70,000 வரை (உயர்தர மாடல்களுக்கு) வேறுபடுகிறது.
காற்று சுத்திகரிப்பான்கள் வீடுகளுக்குள் இருக்கும் PM2.5 துகள்களின் அளவை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. PM2.5 துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாகச் சென்று, பல உறுப்புகளை பாதிக்கக்கூடிய மிகவும் ஆபத்தான காற்று மாசுகளில் ஒன்றாகும்.
ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புக்குள்ளாகும் பிரிவினருக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம். 2022-ல், இந்தியாவில் காற்று மாசுபாடு தொடர்பான 17 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன என மருத்துவர் தரப்பு, மனுதாரர் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், "டெல்லியில் காற்று மாசால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டி ஏர் பியூரிஃபையர்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஏன் குறைக்கக் கூடாது?
ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டுவதற்கு என்ன பிரச்சினை? 10 நாட்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications