ஆம் ஆத்மிக்கு புது தலைவலி.! மணீஷ் சிசோடியாவின் பல கோடி சொத்து முடக்கம்.. அமலாக்க துறை அதிரடி
டெல்லி: டெல்லி மதுக் கொள்கையில் விவகாரத்தில் முன்னாள் டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா.. மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்திருந்தது.

அதாவது மதுபான விற்பனையில் தனியாருக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. கடந்த மார்ச் பிப். மாதம் சிபிஐ விசாரணைக்கு மணீஷ் சிசோடியா ஆஜராகியிருந்தார்.
மணீஷ் சிசோடியா: சுமார் 8 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இறுதியில் கைது செய்யப்பட்டார். சில நாட்களில் அவரை அமலாக்கத் துறையும் கைது செய்தது. மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 52 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கொள்கை விவகாரத்தில் இது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அவரது சொத்து மட்டுமின்றி அமந்தீப் சிங் தால், ராஜேஷ் ஜோஷி, கௌதம் மல்ஹோத்ரா ஆகியோரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிசோடியா மற்றும் அவரது மனைவி சீமா ஆகியோரின் இரண்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வங்கியில் இருந்த ₹ 11 லட்சமும் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமலாக்கத் துறை நடவடிக்கை: சிசோடியாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட பிரபல டெல்லி தொழிலதிபர் தினேஷ் அரோரா நேற்றைய தினம் தான் கைது செய்யப்பட்டிருந்தார். அதற்கு மறுநாளே அமலாக்கத் துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி கூறுகையில், "சிசோடியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தகவலை அமலாக்கத் துறை திட்டமிட்டுக் கசிய விட்டுள்ளது. அமலாக்கத் துறை இப்போது முடக்கியுள்ள இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒன்று, 18 ஆண்டுகளுக்கு முன்பு 2005இல் வாங்கியது. மற்றொரு வீடு 2018இல் வாங்கப்பட்டது, அமலாக்கத் துறை ஆவணத்திலேயே இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியிருக்கும் போது இதை மதுபான கொள்கை விவகாரத்தில் எப்படி இணைக்கலாம்" என்றார்.
என்ன புகார்: டெல்லியில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில், மதுபான விற்பனையில் தனியாருக்கு அனுமதி கொடுத்ததாகவும் இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லெப்டினன்ட் கவர்னர் வி. கே.சக்சேனா இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கடந்த ஆண்டு சிபிஐ உத்தரவிட்டார். அதன்பிறகு, டெல்லி அரசு மீண்டும் பழைய மதுபானக் கொள்கையைக் கொண்டு வந்தது.
இந்த விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக அங்குள்ள பாஜக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. தனியாருக்கு அனுமதி தரப்பட்ட விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கைத் தான் இப்போது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications