ரிலீசாகும் மணீஷ் சிசோடியா..ED, சிபிஐ வழக்குகளில் இருந்து ஜாமீன்.. உச்சநீதிமன்ற நிபந்தனைகள் இதுதான்
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. இதனால் அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். இதற்கிடையே தான் மணீஷ் சிசோடியாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பற்றிய விபரம் வருமாறு:
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி தற்போது முறைகேடு புகாரில் சிக்கி பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. அதாவது டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வரும், கலால்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.

அதாவது டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன. ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆம்ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கயை திரும்ப பெற்றது. ஆனாலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொள்ளப்பட்டது. சிபிஐ விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை உள்ளே வந்தது. அதன்படி மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் இருந்த அவரை சிபிஐயும் கைது செய்தது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் தான் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர். ஒன்றரை ஆண்டு வரை சிறையில் மணீஷ் சிசோடியா உள்ள நிலையில் விசாரணை தாமதப்படுவதை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதன்படி அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகளில் இருந்து மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஜாமீனுக்கான நிபந்தனையாக வாரந்தோறும் திங்கட்கிழமை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சாட்சி மற்றும் ஆதாரங்களை கலைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரூ.10 லட்சம் ஜாமீன் பாண்ட், பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மணிஷ் சிசோடியா சிறையில் இருந்து ஒன்றரை ஆண்டுக்கு பிறகு விடுதலையாக உள்ளார்.
இந்த உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மணீஷ் சிசோடியா விரைவில் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளதால் ஆம்ஆத்மி கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications